பண்ருட்டி அருகே பெண், தீக்குளித்து தற்கொலை
பண்ருட்டி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி,
பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பம் காலனி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 32). தொழிலாளி. இவரது மனைவி உஷா (28). இவர்களுக்கு திருமண மாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர். பெருமாள் மதுகுடிக்கும் பழக்கம் உள்ளவர். இதனால், அவர் வீட்டுக்கு அடிக்கடி மது குடித்துவிட்டு வந்துள்ளார். எனவே கணவன் மனைவியை இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, பெருமாள் மது குடித்து விட்டு வந்தார். அப்போது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த உஷா வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததால், வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். சத்தம் கேட்டு பெருமாள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதில் தீக்காயமடைந்த உஷாவை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், உடல் நிலை மேலும் மோசமானது.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உஷாவை டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை உஷா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உஷா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story