பள்ளி– கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்


பள்ளி– கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 26 Aug 2018 3:00 AM IST (Updated: 25 Aug 2018 5:29 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

பள்ளி– கல்லூரி மாணவர்கள்

தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பிளஸ்–1, பிளஸ்–2 மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு வருகிற 30–ந்தேதியும், கல்லூரி மாணவர்களுக்கு 11.9.2018 அன்றும் போட்டிகள் நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான போட்டி வருகிற 30–ந்தேதி காலை 9 மணிக்கு தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கு 11.9.2018 அன்று காலை 9 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாகவும், கல்லூரி மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் மூலமாகவும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியரையும், கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரையும் அணுகி விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கையெழுத்திட்டு போட்டி நடைபெறும் நாளன்று காலை 9 மணிக்கு கலந்து கொள்ளலாம்.

மாநில போட்டி

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2–வது பரிசாக ரூ.7 ஆயிரமும், 3–வது பரிசாக ரூ. 5 ஆயிரமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டிகளில் முதல் பரிசு பெறுபவர்கள் மட்டும் சென்னையில் நடக்க உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மாநில போட்டி தொடர்பான தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

போட்டிகளுக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் சம்சுதீன் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். இந்த வாய்ப்பை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.


Next Story