தூத்துக்குடியில் வாஜ்பாய் அஸ்திக்கு அனைத்துக்கட்சியினர் அஞ்சலி
தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் அஸ்திக்கு அனைத்துக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
தூத்துக்குடி,
தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் அஸ்திக்கு அனைத்துக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
வாஜ்பாய் அஸ்தி
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி நேற்று முன்தினம் விருதுநகரில் இருந்து புறப்பட்டு தென்காசி, சங்கரன்கோவில் வழியாக கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் நேற்று காலையில் கோவில்பட்டியில் இருந்து புறப்பட்டு எட்டயபுரம், விளாத்திகுளம், குளத்தூர் வழியாக தூத்துக்குடி கொண்டு வரப்பட்டது. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாவட்ட தலைவர் பாலாஜி உடன் வந்தனர்.
தூத்துக்குடி சிட்டி டவர் அருகே உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகம் முன்பு கொண்டு வரப்பட்ட அஸ்திக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், அ.தி.மு.க. சார்பில் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., பா.ஜனதா சார்பில் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் பிரபு, தேசிய பொதுக்குழு உறுப்பினர் சந்தானகுமார், அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாவட்ட தலைவர் தேவகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாநில வணிகர் பிரிவு தலைவர் ராஜகண்ணன், ஒன்றிய தலைவர்கள் சந்தானகுமார், ஜெயசந்திரன், காங்கிரஸ் சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் டேவிட் பிரபாகரன், மண்டல தலைவர் சேகர், மாவட்ட செயலாளர் கோபால், இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, சிவலிங்கம், சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் அற்புதராஜ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
தி.மு.க. செயல்பாடு
முன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது;–
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் புனித சாம்பல் டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்டு சென்னையில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, தமிழம் முழுவதும் பயணம் வந்து கொண்டு இருக்கிறது. இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் ஒவ்வொரு பகுதியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இங்கு அனைத்துக்கட்சி சார்பில் பலர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தை சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது குறித்து தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவால் மிகப்பெரிய இழப்பை திராவிட முன்னேற்ற கழகம் சந்தித்து உள்ளது. இந்த நேரத்தில் தி.மு.க.வின் செயல்பாடுகள் குறித்தோ அல்லது தலைமை குறித்தோ பேசுவது முறையற்ற செயல் என நான் கருதுகிறேன். அவர்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அதன்பின்னர் தான் அவர்களின் செயல்பாடு தெரியும்.
முதல்–அமைச்சர் மற்றும் துணை முதல்–அமைச்சர் மீது தொடுக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை முதல்–அமைச்சர் எப்படி சட்ட ரீதியாக சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story