ஸ்டெர்லைட் ஆலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பொறுப்பு இல்லாமல் பேசக் கூடாது அமைச்சர் கடம்பூர் ராஜூ வேண்டுகோள்


ஸ்டெர்லைட் ஆலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பொறுப்பு இல்லாமல் பேசக் கூடாது அமைச்சர் கடம்பூர் ராஜூ வேண்டுகோள்
x
தினத்தந்தி 26 Aug 2018 3:00 AM IST (Updated: 25 Aug 2018 7:33 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பொறுப்பு இல்லாமல் பேசக்கூடாது என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

கோவில்பட்டி, 

ஸ்டெர்லைட் ஆலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பொறுப்பு இல்லாமல் பேசக்கூடாது என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

பொறுப்பு இல்லாமல்... 

வருகிற 2019–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந்தேதியில் இருந்து பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறி உள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டபோது, அதனை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசு வக்கீல்கள் வாதாடி வருகின்றனர்.

ஆனால் தூத்துக்குடிக்கு வரும் தலைவர்கள் மக்களை பீதியடைய செய்யும் வகையில், எதையாவது சொல்லி விட்டு செல்வது வழக்கமாகி விட்டது. இவ்வாறு 100–வது நாள் போராட்டம் என்று அரசியல் கட்சி தலைவர்கள் தேவையற்ற குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தியதால், பாதிக்கப்பட்டது தூத்துக்குடி மாவட்ட மக்கள்தான். எனவே அரசியல் கட்சி தலைவர்கள் இதுபோன்று பொறுப்பு இல்லாமல் பேசக் கூடாது என்று கேட்டு கொள்கிறேன்.

தி.மு.க.வில் வாரிசு சண்டை 

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு என்பது இல்லை. சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. பின்னர் இணைந்து விட்டோம். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா தனக்கென வாழாமல், தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தார். அவர் உயிரோடு இருக்கும்போதே, மக்களால் நான், மக்களுக்காக நான், எனக்கு வாரிசு யாரும் கிடையாது என்று கூறி உள்ளார்.

ஆனால் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது குடும்பத்துக்காகவே வாழ்ந்தவர். அவர் சில காலம் தன்னுடைய மகன்களான அழகிரியையும், ஸ்டாலினையும் மாறி மாறி முன்னிலைப்படுத்தினார். பின்னர் உள்கட்சி பிரச்சினை காரணமாக அழகிரியை ஒதுக்கி வைத்தார். தற்போது கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அழகிரி தனது உரிமையை நிலைநாட்ட பார்க்கின்றார். எனவே அங்குதான் வாரிசு சண்டை.

நீர்மட்டத்தை குறைக்க... 

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா நீண்ட சட்ட போராட்டத்தை நடத்தி, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தி வெற்றி கண்டார். இதனால்தான் வைகை அணை நிரம்பி, அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் கடைமடை வரைக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது மழை வெள்ளத்தை காரணம் காட்டி, கேரள அரசு முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க முயற்சிக்கின்றது. ஆனால் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட குழுவினர்தான், முல்லை பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்துவதால் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Next Story