பொய்யான விஷயங்களை மக்களிடம் பரப்புவதை தடுக்க வேண்டும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
பொய்யான விஷயங்களை மக்களிடம் பரப்புவதை தடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவில்பட்டி,
பொய்யான விஷயங்களை மக்களிடம் பரப்புவதை தடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறி உள்ளார். எந்த விஷயத்திலும், எதையும் திணிப்பதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. அதற்குமேல் அரசியல் பேச தயாராக இல்லை. ஸ்டெர்லைட் பின்னணி குறித்து திருமாவளவனுக்கு தெரியும். எல்லா விஷயத்திலும் உண்மையான விவரங்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
தேர்தல் ஆணையம் ஒரே நேரத்தில் பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலை நடத்த முடியாது என்று கூறவில்லை. அதற்கான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை என்றுதான் கூறி உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. தேர்தல் கூட்டணி குறித்து அப்போது பார்த்து கொள்ளலாம்.
பாகிஸ்தானில் புதிய அரசாங்கம்
பயங்கரவாதம் நாட்டுக்கு சவால். பயங்கரவாதத்தை யார் கையில் எடுத்தாலும் நாட்டுக்கு சவால்தான். இதில் மத்திய அரசு, மாநில அரசு என்று பிரித்து பார்க்க முடியாது. பயங்கரவாதத்தை எந்த மாநில அரசும் ஏற்றுக் கொள்ளாது. பயங்கரவாதம் இருந்தால், எப்படி ஆட்சி நிர்வாகம் நடத்த முடியும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளிநாட்டில் நமது நாட்டை பற்றி பேசுவது முறைதானா?. பாகிஸ்தான் நாட்டில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றுள்ளது. புதிய அரசாங்கம் புதிய பார்வையில் செயல்பட வேண்டும். இதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி சில கருத்துகளை கூறி இருக்கிறார். இதனை ஏற்று பாகிஸ்தான் அரசாங்கம் செயல்பட்டால், இரு நாடுகளுக்கும் நல்லது.
பொய்யான விஷயங்களை பரப்ப...
உலகம் மிக வேகமான வளர்ச்சியை நோக்கி செல்கின்றபோது, எங்களுக்கு இது தேவையில்லை, நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று பொய்யான விஷயங்களை மக்களிடம் பரப்புவதை தடுக்க வேண்டும். மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட போதும், சமையல் கியாஸ் இணைப்பு வழங்கியபோதும் மக்கள் முதலில் அதனை ஏற்கவில்லை. பின்னர் அதன் பயன்பாட்டை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
காலத்தின் சுழற்சிக்கு ஏற்ப, சுற்றுச்சூழல், இயற்கை, உடல்நலனுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தேவையான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவது அவசியம். டெல்லி–மும்பை இடையே மிகப்பெரிய சாலையை அமைக்கின்றனர். இதனால் அப்பகுதி அபரிமிதமாக வளர்ச்சி அடையும். அதேபோன்று சென்னை–பெங்களூர் இடையேயும் எக்ஸ்பிரஸ் வழித்தடம் அமைக்கின்றனர். இதனால் பயண தூரம் பாதியாக குறையும்.
இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
Related Tags :
Next Story