பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு - அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்
பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக டயாலிசிஸ் சிகிச்சை பிரிவை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
பரமக்குடி,
பரமக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ரூ.18.14 லட்சம் மதிப்பில் 3 டயாலிசிஸ் கருவிகளை கொண்ட சிகிச்சை பிரிவு, ரூ.2.53 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் பேசியதாவது:– மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பொதுமக்களின் உடல்நலத்தை பேணிக்காத்திடும் வகையில் முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பரமக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.18.14 லட்சம் மதிப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 3 டாயலிசிஸ் கருவிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறுநீரக பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். பரமக்குடி பகுதியில் உள்ள பொதுமக்கள் டயாலிசிஸ் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றிற்கு செல்லும் சூழ்நிலை இருந்து வந்தது. தற்போது பரமக்குடி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள டயாலிசிஸ் கருவிகள் மூலம் பரமக்குடி சுற்றுவட்டார பொதுமக்களின் சிரமம் போக்கப்படும்.
இதுதவிர பரமக்குடி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் நலனுக்காக ரூ.2.53 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் ரூ.6.05 கோடி அளவில் 6 ஆயிரத்து 889 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டு மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து மாவட்டத்திற்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல இந்த ஆண்டும் மாவட்டத்திற்கு வைகை தண்ணீர் கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பரமக்குடி தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாததால் இந்த தொகுதியின் குறைகளையும் நிவர்த்தி செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளின் இணை இயக்குனர் முல்லைக்கொடி, முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மர், தலைமை கழக பேச்சாளர் ஜமால், பரமக்குடி கூட்டுறவு நகர வங்கி தலைவர் வடிவேல் முருகன், இயக்குனர்கள் பிரபாகரன், நாகராஜன், வீட்டு வசதி சங்க தலைவர்கள் திலகர், திசைநாதன், நிர்வாகிகள் முத்தரசு, முத்துக்குமார், முன்னாள் மாவட்ட இளைஞரணி பொருளாளர் ராமசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உட்பட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பரமக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நாகநாதன் நன்றி கூறினார்.