காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது


காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2018 3:45 AM IST (Updated: 25 Aug 2018 10:50 PM IST)
t-max-icont-min-icon

கடலாடி அருகே பாண்டிச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

கமுதி,

கடலாடி அருகே வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, அவரது தலைமையில் கமுதி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் கணேசமூர்த்தி, முருகன், தலைமை காவலர்கள் அழகுபாண்டி, எத்திராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தூத்துக்குடியை சேர்ந்த ரெங்கசாமி ரெட்டியார் மகன் ஹரி கிருஷ்ணன் (வயது 35) என்பவர் தனது காரில் பாண்டிச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்தாராம். அந்த மதுபாட்டில்களை கடலாடி மங்களம் என்ற இடத்தில் ஆப்பனூரை சேர்ந்த மூக்கூரான் மகன் முருகபூபதி (34), குருசாமி மகன் மூக்கூரான் (60) ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அவர்கள் மதுபாட்டில்களை தாங்கள் வந்த காரில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் மதுபாட்டில்கள் கடத்தியதாக 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 200–க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களையும் பறிமுதல் செய்து பரமக்குடி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story