தமிழினம் சிதறுவதால் மற்றவர்கள் வலிமை பெறுகின்றனர் - சீமான் பேச்சு
தமிழினம் சிதறுவதால் மற்றவர்கள் வலிமை பெறுகின்றனர் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
காரைக்குடி,
காரைக்குடியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் பழனிபாபா பேரவை தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரவை மாநில செயலாளர் நவுசாத் அலிகான் தலைமை தாங்கினார். கட்சி மாநில செயலாளர் ராஜாமுகமது முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக் வரவேற்றார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சதீப், இஸ்லாமிய ஆய்வு மைய ஹஜரத் சாகுல் ஹமீது ஜமாலி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சீமான் தனது சிறப்புரையில் கூறியதாவது:–
ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்ச்சி குறியீடாக திகழ்ந்தவர் பழனிபாபா. அநீதிக்கு எதிராக அஞ்சாமல் பேராடியவர். நேதாஜி, பகத்சிங் ஆகியோர் வழிவந்தவர். உலகில் முதலில் வந்தது மொழியே தவிர மதம் இல்லை. இஸ்லாமிய சகோதரர்கள் சிறுபான்மையினர் என்ற எண்ணத்தில் இருந்து உளவியல் ரீதியாக விடுபட வேண்டும். தமிழினம் சிதறுவதால் மற்றவர் வலிமை பெறுகின்றனர். வழிபாடு, வழக்காடுதல், பள்ளி, கல்வி நிறுவனங்களில் இருந்து தமிழை வெளியேற்ற முயற்சிக்கின்றனர். மக்களை வழிநடத்தி ஒன்று சேர்க்க வேண்டும். அப்போது தான் மாற்றம் ஏற்படும். சுதந்திரத்தை போராடியே பெற்றோம். அதுபோன்று 50 ஆண்டுகால தமிழர்களுக்கு எதிரான ஆட்சிகளை வீழ்த்துவோம். வருகிற தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து, வெற்றிபெற வேண்டும். ஆனால் ஒருபோதும் இந்திய கட்சிகளுடனோ, திராவிட கட்சிகளுடனோ கூட்டணி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சூடாமணிபுரம் வடக்கு முதல் வீதியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தை சீமான் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் நாம் தமிழர் கட்சியின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன், சிவகங்கை மண்டல செயலாளர் கோட்டைக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம், மண்டல மருத்துவர் அணி ஒருங்கிணைப்பாளர் பிரபாகா, மாவட்ட நிர்வாகி பரிமளம், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் சரவணன் சுரேஷ், காரைக்குடி தொகுதி செயலாளர் தமிழ் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.