பிறமாநிலங்கள் செய்யாத சாதனை திட்டங்களை எல்லாம் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
பிறமாநிலங்கள் செய்யாத சாதனை திட்டங்களை எல்லாம் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
மதுரை,
திருப்பரங்குன்றம் தாலுகா கூத்தியார்குண்டு தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் 224 பேருக்கு ரூ.62 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் செல்லூர் ராஜூ கடன் உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலமும் செய்யாத சாதனை திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தான் கைத்தறிநெசவாளர்களுக்கு 250 யூனிட் மின்சாரமும், விசைத்தறிநெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரமும் இலவசமாக வழங்கப்படுகிறது. 1 கோடியே 94 லட்சம் குடும்பங்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் நமது தமிழகம் தான். ஆலயங்கள் தோறும் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு பக்தர்கள் உணவருந்துகிறார்கள்.
கூட்டுறவுத்துறையின் மூலமாக தமிழகம் முழுவதும் 2011–ம் ஆண்டு முதல் கடந்த ஜூலை மாதம் வரை ரூ.1 லட்சத்து 97 ஆயிரம் கோடி அளவுக்கு நகைகடன்கள் வழங்கப்பட்டு உள்ளது. இது வரலாற்று சாதனை. இதுவரை எந்த அரசும் இந்த அளவுக்கு கடன் வழங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் நடராஜன் பேசும் போது கூறியதாவது:–
மதுரை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்கள் மூலமாக பயிர்க்கடன் வழங்க 2018–19–ம் ஆண்டிற்கு ரூ.160 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 4,522 பேருக்கு ரூ.32.11 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர்க்காப்பீடு திட்டத்தில் 2016–17–ம் ஆண்டு பிரீமியம் செலுத்திய 13 ஆயிரத்து 748 விவசாயிகளுக்கு ரூ.34.46 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நடத்தப்படும் 20 மருந்தகங்களில் 15 சதவீத தள்ளுபடி அளிக்கப்படுகிறது. மாநிலத்திலேயே முதன் முறையாக மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகிளைகள் மூலம் முதியோர் ஓய்வூதியதொகை வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.