கொள்ளிடம் அணை இடிந்த இடத்தில் 2½ லட்சம் மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிக சீரமைப்பு பணி


கொள்ளிடம் அணை இடிந்த இடத்தில் 2½ லட்சம் மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிக சீரமைப்பு பணி
x
தினத்தந்தி 26 Aug 2018 4:45 AM IST (Updated: 26 Aug 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அணை இடிந்த இடத்தில் 2½ லட்சம் மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிக சீரமைப்பு பணிகளை 300 தொழிலாளர்கள் இரவு-பகலாக மேற்கொண்டு வருகிறார்கள்.

ஜீயபுரம்,

திருச்சி அருகே உள்ள முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உள்ள 45 மதகுகளில் 6 முதல் 14 வரை உள்ள 9 மதகுகள் கடந்த 22-ந் தேதி இரவு உடைந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. மதகை தாங்கி நின்ற ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட செங்கற்களால் ஆன தூண்கள் மற்றும் இரும்பு மின் மோட்டார் உள்ளிட்ட அனைத்தும் உடைந்தன. இதனால், 50 கிராம மக்கள் பயன்படுத்தி வந்த பாலமும் துண்டானதால் அந்த வழியாக போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

108 மீட்டர் தூரத்துக்கு இடிந்த அணையில் தற்காலிக சீரமைப்பு பணிகள் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. அதற்காக ரூ.95 லட்சம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 25 பேர் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். இதுமட்டுமல்லாது நேற்று முன்தினம் கொள்ளிடம் அணையை பார்வையிட்ட தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி 4 நாட்களில் முடிக்கப்பட்டு விடும் என தெரிவித்தார்.

தற்காலிக சீரமைப்பு பணியில் திருச்சி, தொட்டியம், கரூர் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த சுமார் 300 தொழிலாளர்கள் இரவு-பகலாக ஈடுபட்டு வருகிறார்கள். காவிரி ஆற்றின் ஒரு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட மணலை 2½ லட்சம் சாக்கு பைகளில் நிரப்பி, தடுப்பு ஏற்படுத்தப்படுகிறது. டிராக்டர் மூலமாக மணல் மூட்டைகளை ஏற்றி வந்து, கொள்ளிடம் அணையின் முதல் மதகு முதல் 17-வது மதகு வரை சுமார் 220 மீட்டர் தூரத்துக்கு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட உள்ளது. சீரமைப்புக்கு தேவையான சவுக்கு கட்டைகள் கரூரில் இருந்து கொண்டு வரப்பட்டது. கொள்ளிடம் ஆற்றின் தரைப்பகுதியில் இருந்து 1.20 மீட்டர் உயரத்துக்கும், 3 மீட்டர் அகலத்திலும் 220 மீட்டர் தூரத்துக்கு 2½ லட்சம் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிக சீரமைப்பு பணி செய்யப்படுகிறது. நேற்று மாலை வரை முதல் மதகில் இருந்து 30 மீட்டர் தூரம் வரை மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன.

கொள்ளிடம் அணையில் தற்காலிக சீரமைப்பு பணிகளை நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஆய்வு செய்தார். அவர் சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சீரமைப்பு பணியை ஆற்றுப்பகுதி பாசன கோட்ட 25 பொறியாளர்கள் கண் காணித்து வருகிறார்கள். நேற்று மாலை கொள்ளிடம் ஆற்றின் மேல்பகுதியில் தண்ணீரில் ரப்பர் படகில் சென்றபடி தீயணைப்புத்துறையினர் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தினர். மேலும் நீர்வரத்து அதிகம் உள்ள இடத்தையும் ஆய்வு செய்து, அங்கு தொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தினர்.முக்கொம்பு மேலணைக்கு தற்போது நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது. நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 17 ஆயிரத்து 300 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. அதில் காவிரி ஆற்றில் மட்டும் 10 ஆயிரத்து 70 கன அடியும், கொள்ளிடத்தில் 7 ஆயிரத்து 230 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Next Story