டி.ஐ.ஜி. வீட்டில் 30 பவுன் நகை திருட்டு வேலைக்கார பெண், ஆண் நண்பருடன் கைது


டி.ஐ.ஜி. வீட்டில் 30 பவுன் நகை திருட்டு வேலைக்கார பெண், ஆண் நண்பருடன் கைது
x
தினத்தந்தி 26 Aug 2018 3:15 AM IST (Updated: 26 Aug 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூரில் ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஐ.ஜி. வீட்டில் 30 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண், ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

அம்பத்தூர்,

அம்பத்தூர் வி.ஜி.என் சாந்தி நகர் தேவதாஸ் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 64). இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் முன்னாள் டி.ஐ.ஜி. ஆவார். இவரது வீட்டில் விருகம்பாக்கம் காந்தி நகரை சேர்ந்த லலிதா (26) கடந்த ஜூலை மாதத்தில் இருந்து வீட்டு வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வரலட்சுமி நோன்பு நிகழ்ச்சிக்காக சாமிக்கு அலங்காரம் செய்து தங்கநகை அணிவிப்பதற்காக போலீஸ் அதிகாரியின் மனைவி சத்யா நகை இருக்கும் பீரோவை திறந்து பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 30 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.

லலிதாவை தவிர அந்த அறைக்குள் யாரும் வெளி ஆட்கள் செல்ல மாட்டார்கள். எனவே லலிதா மீது கிருஷ்ணசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து கிருஷ்ணசாமி அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் லலிதாவை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் நகை திருடியதை ஒப்புக் கொண்டார். திருடிய நகையை நண்பரும் வாஷிங்மெஷின் மெக்கானிக்குமான ஜாபர்கான் பேட்டை சேகர் நகரை சேர்ந்த விவேகானந்தன் என்பவரிடம் கொடுத்து வைத்ததாக கூறினார்.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இருவரையும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.



Next Story