திம்பம் மலைப்பாதையில் உணவுக்காக காத்திருக்கும் வெண்மந்தி குரங்குகள் வேட்டையாடப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு


திம்பம் மலைப்பாதையில் உணவுக்காக காத்திருக்கும் வெண்மந்தி குரங்குகள் வேட்டையாடப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 26 Aug 2018 3:30 AM IST (Updated: 26 Aug 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் வெண்மந்தி குரங்குகள் உணவுக்காக காத்திருக்கின்றன. இந்த குரங்குகளை வேட்டையாட ஒருசிலர் முயற்சிப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளார்கள்.

தாளவாடி,

தாளவாடி அருகே அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்துக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த மலைப்பகுதியில் மான், யானை, புலி, சிறுத்தைப்புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக தென்னிந்தியாவில் மட்டும் காணப்படும் அரியவகை வெண்மந்தி குரங்குகள் அதிகஅளவில் காணப்படுகின்றன.

இந்த குரங்குகள் திம்பம் சாலையோரத்தில் உள்ள மரங்களை வசிப்பிடமாக கொண்டு உள்ளது. வெண்மந்தி குரங்குகள் மரங்களில் காணப்படும் பூ, மொட்டுகள், விதைகள் மற்றும் மரத்தண்டுகளை உட்கொண்டு வாழ்கின்றன. தற்போது அந்த குரங்குகள் அனைத்தும் திம்பம் மலைப்பகுதியில் உள்ள சாலையில் நடமாடுகின்றன. அப்போது அந்த குரங்குகளுக்கு அந்த வழியாக வாகனங்களில் வரும் சுற்றுலாப்பயணிகள் தின்பண்டங்களை கொடுக்கிறார்கள். இதனால் வெண்மந்தி குரங்குகள் கூட்டம் அதிகஅளவில் திம்பம் மலைப்பாதையில் சாலையோரத்தில் சுற்றுலாப்பயணிகள் தரும் உணவுக்காக காத்திருக்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஒருசில குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் வாகன ஓட்டிகள் திம்பம் மலைப்பகுதியில் நிறுத்தி பழம், பிஸ்கெட் உள்பட பல்வேறு உணவு வகைகளை வெண்மந்தி குரங்குகளுக்கு அளிப்பதால், இயற்கை உணவு பழகத்தில் இருந்து மாறி செயற்கை உணவுக்கு பழகிவிட்டன. இதனால் குரங்கின் உடல்களில் கோளாறு ஏற்பட்டு பல்வேறு தொற்றுநோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. தற்போது வாகன ஓட்டிகள் தின்பண்டங்களை கொடுத்து பழக்கிவிட்டதால் மனிதர்களிடம் எளிதாக நெருங்குகிறது. இதனால் ஒருசிலர் வெண்மந்தி குரங்குகளை வேட்டையாடுகின்றனர்.

வெண்மந்தி குரங்குகளுக்கு உணவு அளிக்கக்கூடாது என திம்பம் மலைப்பகுதியில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதனை கண்டுகொள்ளாமல் வாகன ஓட்டிகள் தொடர்ந்து குரங்குகளுக்கு உணவளித்து வருகின்றனர். எனவே வனத்துறையினர் திம்பம் மலைப்பாதை சாலையில் சுற்றித்திரியம் வெண்மந்தி குரங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குரங்குளை வேட்டையாட முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


Next Story