சீர்காழி பகுதியில் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் உறுதி


சீர்காழி பகுதியில் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் உறுதி
x
தினத்தந்தி 26 Aug 2018 4:00 AM IST (Updated: 26 Aug 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி பகுதியில் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுரேஷ்குமார் கூறினார்.

சீர்காழி,

சீர்காழி தாலுகா பகுதியில் கழுமலையாறு, பொறைவாய்க்கால் உள்ளிட்ட பாசனவாய்க்காலை நம்பி 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் பாசனவசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் தற்போதுவரை சீர்காழி பகுதியில் உள்ள முக்கிய வாய்க்கால்களில் போதிய அளவு செல்லாததால் விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீரின்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை பொதுப்பணித்துறையினர் சரியாக தூர்வாராததால் செடி-கொடிகள் புதர்மண்டி கிடக்கின்றன.

இந்தநிலையில் சீர்காழி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாசன வாய்க்கால்களில் முழுமையாக தண்ணீர் திறந்து விடக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், சீர்காழி கழுமலையாறு, சேந்தங்குடி பொறைவாய்க்கால், புத்தூர் புதுமண்ணியாறு, பழவாறு உள்ளிட்ட பாசன வாய்க்கால்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர், பழவாறு தலைப்பில் உள்ள மணல் திட்டுகளை அகற்றி புதுமண்ணியாற்றின் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல ஏதுவாக தூர்வாரும் பணியை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டு கொண்டார்.

இதையடுத்து கலெக்டரிடம் விவசாயிகள், சீர்காழி பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்களில் முழுமையாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி கோரிக்கை விடுத்தனர். அதற்கு கலெக்டர், சீர்காழி பகுதியில் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசெல்வி மற்றும் பலர் உடன் இருந்தனர். 

Next Story