ஆதாரமின்றி எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்


ஆதாரமின்றி எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 26 Aug 2018 4:15 AM IST (Updated: 26 Aug 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

ஆதாரமின்றி எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 301 விசைப்படகுகள் உள்ளன. இவை அனைத்தும் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு புரிந்துணர்வு ஒப்பந்தப்படி திங்கள், புதன், சனி ஆகிய கிழமைகளில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

விசைப்படகுகளுக்கு மல்லிப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் மீன்பிடி துறை முகங்கள் உள்ளன. இதில் சேதுபாவாசத்திரம் துறை முகத்தில் மட்டும் 90 விசைப்படகுகள் உள்ளன. விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்துவதாக கூறி மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகினர். அப்போது சேதுபாவாசத்திரத்தை சேர்ந்த பரமசிவம்(வயது 34), மரகதம்(34), ராமகிருஷ்ணன்(45), ஐயப்பன்(45), ஜோனஸ்ராஜ்(54) என்பவர்களுக்கு சொந்தமான 5 விசைப்படகுகள் மீது இரட்டைமடிவலையை பயன்படுத்தியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக்கூறி அனுமதி டோக்கன் மற்றும் மானிய டீசல் வழங்க மறுக்கப் பட்டுள்ளது.

இதை தொடர்ந்து 5 விசைப்படகுகள் மீதும் ஆதாரமின்றி எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 90 விசைப்படகு மீனவர்களும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும், ஆதாரமின்றி விசைப்படகுகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை ரத்து செய்யக்கோரி தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட கலெக்டர் அண்ணாதுரைக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

Next Story