வாஜ்பாய் அஸ்திக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி கன்னியாகுமரி கடலில் இன்று கரைக்கப்படுகிறது


வாஜ்பாய் அஸ்திக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி கன்னியாகுமரி கடலில் இன்று கரைக்கப்படுகிறது
x
தினத்தந்தி 25 Aug 2018 11:15 PM GMT (Updated: 25 Aug 2018 9:17 PM GMT)

குமரி மாவட்டம் வந்த வாஜ்பாய் அஸ்திக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். கன்னியாகுமரி கடலில் அஸ்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கரைக்கப்படுகிறது.

நாகர்கோவில்,

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந் தேதி மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள யமுனை ஆற்றங்கரையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. வாஜ்பாய் அஸ்தியை கலசங்களில் வைத்து நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளில் கரைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகத்திலும் கன்னியாகுமரி, ராமேசுவரம் உள்ளிட்ட 7 இடங்களில் அஸ்தியை கரைப்பதற்காக பா.ஜனதாவினர் எடுத்து வந்துள்ளனர். அந்த அஸ்தி, கரைக்கப்பட உள்ள அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதே போல கன்னியாகுமரி கடலில் கரைப்பதற்காக வாஜ்பாய் அஸ்தி வைக்கப்பட்ட கலசத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை குமரி மாவட்டத்துக்கு எடுத்து வந்தார். அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அஸ்தி கொண்டு வரப்பட்டது. அந்த வாகனத்தில் வாஜ்பாய் உருவப்படம் இருந்த பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

குமரி மாவட்டம் வந்த வாஜ்பாய் அஸ்திக்கு ஆரல்வாய்மொழியில் பா.ஜனதாவினர் மரியாதை செலுத்தினர். பின்னர் ஆரல்வாய்மொழி சந்திப்பில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி வைக்கப்பட்டது. அப்போது பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் திரளாக வந்து மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து அஸ்தி கலசம் வைக்கப்பட்டிருந்த வாகனம் அங்கிருந்து புறப்பட்டது. பின்னர் தோவாளை வழியாக நாகர்கோவிலை வந்தடைந்தது. அஸ்தியை எடுத்துச் சென்ற அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் முன் ஏராளமான இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் சென்றனர்.

அதன் பிறகு ஒழுகினசேரி சந்திப்பிலும் பொதுமக்கள் கூடி நின்று வாஜ்பாய் அஸ்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகளும் அஸ்திக்கு மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு அஸ்தி எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பீச்ரோடு, ஈத்தாமொழி ராஜாக்கமங்கலம், அம்மாண்டிவிளை, மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, திங்கள்நகர், அழகியமண்டபம், தக்கலை, இரணியல், குருந்தன்கோடு ஆகிய இடங்களுக்கு அஸ்தி கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அஸ்தி கலசத்துடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் உடன் சென்றார்.

பின்னர், அஸ்தி கலசம் மீண்டும் நாகர்கோவில் கொண்டு வரப்பட்டு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு அஸ்திக்கு பொதுமக்கள் விடிய, விடிய அஞ்சலி செலுத்தினர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அஸ்தி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுகிறது. இதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகத்தில் இருந்து காலை 9 மணிக்கு அஸ்தி கன்னியாகுமரிக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. முன்னதாக அரசியல் கட்சியினர் அஞ்சலிக்காக அஸ்தி வைக்கப்பட இருக்கிறது. பின்னர் வழி நெடுகிலும் அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் அஸ்தி கரைக்கப்படுகிறது. 

Next Story