வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார்: பாதிக்கப்பட்ட மாணவி, பெற்றோரிடம் விசாரணை


வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார்: பாதிக்கப்பட்ட மாணவி, பெற்றோரிடம் விசாரணை
x
தினத்தந்தி 26 Aug 2018 5:00 AM IST (Updated: 26 Aug 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே வேளாண் கல்லூரியில் உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையை அடுத்த வாணாபுரத்தில் அரசு வேளாண்மை கல்லூரி உள்ளது. இங்கு சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றும் தங்கபாண்டியன் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதற்கு விடுதி காப்பாளர்களாக உள்ள கல்லூரி பேராசிரியைகள் ஒத்துழைப்பு அளிக்க வற்புறுத்தியதாகவும் கல்லூரி முதல்வரிடம் மாணவி புகார் அளித்தார். இந்த புகார் மாநிலம் முழுவதும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் ஆஜராகி, தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து வாக்குமூலம் அளித்தார். பின்னர் நீதிபதி மகிழேந்தி, மாணவியின் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான போலீசார் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோவை வேளாண்மை பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் கல்லூரி முதல்வர், பேராசிரியைகள், மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் பாலியல் புகாருக்கு உள்ளான உதவிப் பேராசிரியர் தங்க பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் மாணவியும் விடுதியை விட்டு வெளியேறினார்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வருமாறு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் நேற்று மதியம் 2.30 மணியளவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அவரிடம் போலீசார் பல்வேறு கேள்விகள் கேட்டு உள்ளனர்.

மேலும் மாணவியின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்தும் போலீசார் அந்த மாணவியிடம் எழுத்துப்பூர்வமாகவும் புகார் பெறப்பட்டது. விசாரணை முடிந்து அந்த மாணவி மற்றும் அவரது பெற்றோர் சுமார் 7.30 மணியளவில் அங்கிருந்து வெளியே வந்தார். சுமார் 5 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்று உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில், போலீசாரின் கேள்விகள் ஒரு தலைபட்சமாக உள்ளது. என்னை குறிவைத்தே கேள்வி கேட்கப்பட்டது என்று குற்றம் சாட்டினார்.

மாணவியின் தரப்பினர் கூறுகையில், “முதலில் இந்த சம்பவம் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சம்பவத்தை மறைப்பதற்காக போலீசார் செயல்பட்டனர். ஆனால் இதில் நீதிமன்றம் தலையிட்ட பிறகு தான் போலீசார் இந்த சம்பவத்தில் தீவிரம் காட்டி உள்ளனர். இதனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாணவியின் தரப்பினர் கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி எழுத்து பூர்வமாக புகார் அளித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. ஆனால் இந்த சம்பவம் கல்லூரி முதல்வர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க செல்போனில் மாணவியிடம் பேசியதாக கூறப்படும் விடுதி காப்பாளர்களான போராசிரியைகள் மீதும் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாணவி தரப்பில் குற்றம்சாட்டி உள்ளனர்.

Next Story