8 வழி சாலை திட்டத்தை ரத்து செய்து விட்டு ரூ.10 ஆயிரம் கோடியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்


8 வழி சாலை திட்டத்தை ரத்து செய்து விட்டு ரூ.10 ஆயிரம் கோடியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்
x
தினத்தந்தி 26 Aug 2018 4:15 AM IST (Updated: 26 Aug 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டு ரூ.10 ஆயிரம் கோடியில் தமிழகத்தில் உள்ள ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

தர்மபுரி,

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் தர்மபுரி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் ஆகியவற்றின் சார்பில் 45-வது தமிழ்நாடு மாநில ஜூனியர் பெண்கள் கபடி போட்டி மற்றும் சாம்பியன் பட்ட போட்டி தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. நேற்று 2-ம் நாள் போட்டிகள் தொடக்க விழாவிற்கு மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் பி.பாஸ்கர் தலைமை தாங்கினார். செயலாளர் கருணாகரன் வரவேற்று பேசினார். மாநில பொதுச்செயலாளர் சபியுல்லா, மாநில பொருளாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து வீராங்கனைகளை வாழ்த்தி பேசினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

தமிழர்களின் வீர விளையாட்டான கபடிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து தங்கப்பதக்கங்களை பெற்று வந்த இந்திய அணி தற்போது பதக்கங்களை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசு கபடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உலக அளவிலான போட்டிகளில் இந்திய கபடி அணி மீண்டும் அதிக பதக்கங்களை பெற ஊக்குவிக்க வேண்டும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது தொடர்பாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் முடிவு செய்வோம். காவிரி ஆற்றில் தற்போது 155 டி.எம்.சி. தண்ணீர் உபரியாக வெளியேறி கடலில் கலந்து வீணாகி உள்ளது. உபரி நீரை முறையாக பயன்படுத்த தமிழக அரசு முன்கூட்டியே எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் நீர்பாசன திட்டங்களுக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மாறாக சேலம்-சென்னை இடையே ஏற்கனவே 3 தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கும் நிலையில் புதிதாக ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழி பசுமை சாலை திட்டத்தை நிறைவேற்ற துடிக்கிறது. பொதுமக்களுக்கு எந்தவித பயனும் அளிக்காத அந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.10 ஆயிரம் கோடியில் தமிழகம் முழுவதும் 33 ஆறுகளின் குறுக்கே 50 கி.மீ. தூரத்திற்கு ஒரு இடத்தில் ஒரு புதிய தடுப்பணையை கட்ட வேண்டும்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

Next Story