கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்: சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை


கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்: சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Aug 2018 4:06 AM IST (Updated: 26 Aug 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும். சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சாலை விபத்துகளில் சிக்குபவர்களில் பெரும்பாலானோர் தலையில் ஏற்படும் கொடுங்காயத்தினால் உயிரிழக்கின்றனர். எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வாகன ஓட்டியும், பின்னால் அமர்ந்து இருப்பவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்துசெல்ல வேண்டும். இதன்மூலம் உயிரிழப்புகளை தவிர்க்கலாம். இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் திருவள்ளூர் போக்குவரத்து போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த மோட்டார்சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தலைமை தாங்கி, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர், போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கினார்.

பின்னர் மோட்டார்சைக்கிள் பேரணி மணவாளநகர் சந்திப்பு பகுதியில் இருந்து ஆயில்மில், ஜே.என்.சாலை வழியாக சென்று திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே முடிவடைந்தது.

அதைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, நிருபர்களிடம் கூறியதாவது:-

விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க இருசக்கர வாகனங்களை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து இருப்பவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டக் கூடாது. மது அருந்தியோ, அதிவேகமாகவோ வாகனங்களை ஓட்டக்கூடாது. வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து நடக்க வேண்டும். சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலை விபத்துகளை தவிர்க்க வாகன ஒட்டிகள் சாலை விதிகளையும், போக்குவரத்து விதிகளையும் கடைப்பிடிக்க வேண்டும். போக்குவரத்து சிக்னல்களை கவனித்து சாலைகளை கடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேந்திரன், வெங்கடேசன், இன்ஸ்பெக்டர்கள் செல்லதுரை, தமிழ்வாணன், பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராக்கிகுமாரி, பத்மஸ்ரீபப்பி மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

Next Story