திருவள்ளூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் அமைச்சர் பென்ஜமின் தொடங்கி வைத்தார்


திருவள்ளூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் அமைச்சர் பென்ஜமின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 Aug 2018 4:08 AM IST (Updated: 26 Aug 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் பிளாஸ்டிக் கழிவு ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை அமைச்சர் பென்ஜமின் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர்,

பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் விதமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அளவில் ‘பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழ்நாடு’ என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியும் அறிவுறுத்தினார்.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் மாசு இல்லாத மாவட்டமாக உருவாக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நேற்று திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை தாங்கினார். துணை கலெக்டர் ரத்னா, பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பி.பலராமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் எஸ்.எஸ்.குமார், திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், திருவள்ளூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் கமாண்டோ அ.பாஸ்கரன், நகராட்சி ஆணையர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் கலந்துகொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துக்கூறியதுடன், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் விதமாக துணிப்பைகள், பாக்கு மரத்தால் ஆன தட்டு உள்ளிட்டவைகளை வழங்கினார்.

அதைதொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து உறுதிமொழியை அமைச்சர் வாசிக்க, அவரை பின்தொடர்ந்து அரசு அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அதன்பிறகு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் பென்ஜமின், பேரணியில் பங்கேற்றவர்களுடன் தானும் சென்றார்.

அப்போது அவர் வழிநெடுகிலும் வாகன ஓட்டிகள், கடைக்காரர்கள், பொதுமக்களிடம் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர் திருவள்ளூரை அடுத்த காக்களூர் குளத்தில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியை அமைச்சர் பென்ஜமின் மேற்கொண்டார்.

அவருடன் சேர்ந்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார், பி.வேணுகோபால் எம்.பி., பலராமன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் குளத்தில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர்.

Next Story