தமிழக ஆறுகளில் தடுப்பணை கட்ட பயன்படுத்த வேண்டும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கோரிக்கை


தமிழக ஆறுகளில் தடுப்பணை கட்ட பயன்படுத்த வேண்டும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கோரிக்கை
x
தினத்தந்தி 26 Aug 2018 5:37 AM IST (Updated: 26 Aug 2018 5:37 AM IST)
t-max-icont-min-icon

8 வழி சாலைக்கு ஒதுக்கிய ரூ.10 ஆயிரம் கோடி நிதியை தமிழக ஆறுகளில் தடுப்பணை கட்ட பயன்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

மேச்சேரி,

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சேலம் மாவட்டம் மேச்சேரி பஸ் நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் நிழற்கூடம் அமைக்கப்படுகிறது. மேலும் ரூ.5 லட்சம் செலவில் 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர், சுடுநீர் வசதி திட்ட தொடக்க விழா நடந்தது. இதற்கு தர்மபுரி எம்.பி.அன்புமணிராமதாஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். விழாவிற்கு வந்தவர்களை சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ராஜசேகரன் வரவேற்றார். மாநில பொறுப்பாளர்கள் கண்ணையன், ராஜா, சதாசிவம், மாவட்ட சிறப்பு செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வம், மேட்டூர் தொகுதி அமைப்பு செயலாளர் ராஜா, மாவட்ட பசுமை தாயக அமைப்பாளர் கண்ணன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-

மேச்சேரியில் இருந்து மேட்டூர் அணை 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் மேச்சேரி பகுதி விவசாயிகளுக்கு பயன் இல்லை. இங்குள்ள மக்களுக்கு போதுமான குடிநீர் வசதியும் கிடைப்பதில்லை. கடந்த 6 வாரங்களில் மேட்டூர் அணையில் இருந்து 155 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது.

மேட்டூர் உபரிநீர் திட்டம் தொடங்க கோரி 50 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முலம் சேலம் மாவட்டம் முழுவதும் பயன் பெற 5 டி.எம்.சி. உபரி நீரே போதுமானது. மேச்சேரி, ஆத்தூர், தலைவாசல், வசிஷ்டநதி, மணிமுத்தாறு, வெள்ளார் ஆகிய பகுதிகளை இணைத்து மேட்டூர்-சேலம் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றவேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டது.

ஆனால் அது இதுவரை நிறைவேற்றவில்லை.் சேலம் மாவட்டத்தை சேர்ந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைத்தால் ஒரே கையெழுத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும். மேட்டூர்-சேலம் உபரிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஒட்டு மொத்த மக்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன்.

மேட்டூர் உபரிநீர் திட்டம், காவிரி குண்டாறு திட்டம், தாமிரபரணி திட்டம் உள்பட 20 நீர்நிலை திட்டங்கள் நிலுவையில் உள்ளது. இந்த திட்டங்களை நிறைவேற்றினால் எவ்வளவு வறட்சி வந்தாலும் உபரிநீரை தேக்கி பயன்படுத்தலாம். அதற்கு தகுந்தாற் போல் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். இத்தகைய தொலைநோக்கு பார்வை அரசிடம் இல்லை.

சேலம்-சென்னை இடையே 8 வழிசாலை திட்டம் தேவையில்லாத ஒன்று. சேலம்-சென்னைக்கு 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. 4-வது தேசிய நெடுஞ்சாலை தேவையில்லை. 2 ரெயில்வே பாதை, விமான போக்குவரத்து உள்ளது. எனவே 8 வழி சாலை திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி ரூ.10 ஆயிரம் கோடியை தமிழ்நாட்டில் உள்ள 33 ஆறுகளில் ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை அமைத்து 50 டி.எம்.சி நீரை தேக்கலாம். இதனால் வருங்காலத்தில் தமிழ்நாடு செழிப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story