முதல்-மந்திரி பதவியை காப்பாற்றுவதற்காக நேரத்தை வீணடிக்க மாட்டேன் : குமாரசாமி பேச்சு


முதல்-மந்திரி பதவியை காப்பாற்றுவதற்காக நேரத்தை வீணடிக்க மாட்டேன் : குமாரசாமி பேச்சு
x
தினத்தந்தி 26 Aug 2018 5:52 AM IST (Updated: 26 Aug 2018 5:52 AM IST)
t-max-icont-min-icon

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாகவும், முதல்-மந்திரி பதவியை காப்பாற்றுவதற்காக நேரத்தை வீணடிக்க மாட்டேன் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு உத்தரஹள்ளி மெயின் ரோட்டில் புதிதாக மாணவிகளுக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. நேற்று அந்த விடுதியின் திறப்பு விழா நடந்தது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொண்டு விடுதியை திறந்துவைத்தார். பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது:-

நான் முதல்-மந்திரியானால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன் என்று கூறினேன். அதன்படி, விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து வருகிறேன். விவசாய கடனை தள்ளுபடி செய்தால் தான் விவசாயிகளை வாழவைக்க முடியும். செப்டம்பர் 3-ந் தேதி புதிய முதல்-மந்திரி பதவி ஏற்க உள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. அதுபற்றி நான் அதிகமாக நினைப்பதில்லை. எதிர் பாராத விதமாக நான் முதல்- மந்திரியாகி உள்ளேன். கடந்த 2006-ம் ஆண்டும், அப்படி தான் பதவிக்கு வந்தேன். அதனால் எத்தனை நாட்கள் நான் முதல்-மந்திரி பதவியில் இருப்பேன் என்பது தெரியவில்லை.

கடவுளுக்கு மட்டும் தான் தெரியும். பதவியில் இருக்கும் வரை மாநில மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான் எனது நோக்கம். மக்களுக்கும், மாநில வளர்ச்சிக்கும் சேவை செய்வேன். முதல்-மந்திரி பதவியை காப்பாற்றுவதற்காக எனது நேரத்தை வீணடிக்கவும் மாட்டேன். பதவியை காப்பாற்ற எந்த விதமான தந்திரங்களையும் செய்யப்போவதில்லை. கூட்டணி ஆட்சியை கவிழ்க்கவும், என்னை முதல்-மந்திரி பதவியில் இருந்து இறக்கவும் சதி நடப்பது பற்றி எனக்கு நன்கு தெரியும். அதுபற்றி நினைத்து நான் கவலைப்பட போவதில்லை.

மாநிலத்தில் ஜனதாதளம்(எஸ்), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நிலைத்து இருக்கும். எக்காரணத்தை கொண்டும் கூட்டணி ஆட்சி கவிழாது. அதனால் கூட்டணி ஆட்சி கவிழும் என்று யாரும் கவலைப்பட வேண்டாம். அரசு அதிகாரிகள் எப்படி பணியாற்றுகிறார்கள் என்பது பற்றி எனக்கு தெரியும். தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன். கூட்டணி ஆட்சி 100 நாட்களை நிறைவு செய்ய இருக்கிறது. அடுத்தகட்டமாக ஆட்சியை முன்னெடுத்து செல்ல என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

ஒவ்வொரு திட்டத்தை செயல்படுத்துவதற்கும் மத்திய அரசிடம் இருந்து நிதி உதவியை எதிர்பாராமல், மாநில மக்களிடம் வசூலிக்கும் வரி மூலமாக திட்டங்கள் நிறைவேற்றப்படும். குமாரசாமியால் சரியாக ஆட்சி நடத்த முடியாது என்று பேசுகிறார் கள். எனது நோக்கம் விவசாயிகள், ஏழை மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பது தான். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன்.

கந்துவட்டியால் ஏழை, நடுத்தர மக்கள், நடைபாதை வியாபாரிகள் பெரிதும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். கந்துவட்டியை அடியோடு ஒழிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். முதற்கட்டமாக நடைபாதை வியாபாரிகள் கந்து வட்டி வாங்குவதை தடுக்க செல்போன் வங்கி சேவை (மொபைல் பேங்கிங்) திட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளேன். இந்த திட்டம் மூலம் நடைபாதை வியாபாரிகள் அரசிடம் இருந்து காலையில் ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு, மாலையில் அதனை திருப்பி கொடுக்க வேண்டும். இதன்மூலம் கந்து வட்டியால் பாதிக்கப்படும் வியாபாரிகள் நிம்மதி அடைவார்கள்.

விவசாய கடனை தள்ளுபடி செய்யும் விவகாரத்தில் சில இடையூறுகள் உள்ளன. சிலர் தடையாகவும் இருக்கிறார்கள். மக்கள் தங்களது பிரச்சினைகளையும், குறைகளையும் என்னிடம் தெரிவிக்க வீட்டிற்கு வருகின்றனர். அவர்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்டு வருகிறேன். தினமும் மக்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்பதால், எனது நேரம் வீணாகிறது. சில நேரம் மக்களை சந்திக்க முடியாமல் போகிறது. அதனால் வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமை அன்று மக்களை சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டு தீர்த்து வைக்க முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு குமாரசாமி பேசினார். 

Next Story