நீச்சல் குளத்திற்குள் நீந்தும் குடும்பம்


நீச்சல் குளத்திற்குள் நீந்தும் குடும்பம்
x
தினத்தந்தி 26 Aug 2018 3:35 PM IST (Updated: 26 Aug 2018 3:35 PM IST)
t-max-icont-min-icon

‘‘உச்சி முதல் பாதம் வரை அனைத்து உடல் உறுப்புகளையும் ஒரு முகப்படுத்தி இயங்கவைக்கும் ஆற்றல் நீச்சல் பயிற்சிக்கு இருக்கிறது. குறிப்பாக மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

‘‘உச்சி முதல் பாதம் வரை அனைத்து உடல் உறுப்புகளையும் ஒரு முகப்படுத்தி இயங்கவைக்கும் ஆற்றல் நீச்சல் பயிற்சிக்கு இருக்கிறது. குறிப்பாக மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும். மன வலிமையை அதிகரிக்கச் செய்யும். மன அழுத்தத்தை போக்கும். தோல்வியை தாங்கும் சக்தியையும், அதில் இருந்து மீள்வதற்கான தன்னம்பிக்கையையும் கொடுக்கும். மற்ற எந்த உடற்பயிற்சியை செய்தாலும் தொடக்கத்தில் உடல்வலி எட்டிப்பார்க்கும். ஆனால் நீச்சலில் உடலும், உள்ளமும் உற்சாகம்தான் அடையும்’’ என்கிறார், முனியாண்டி.

சென்னை மாநகராட்சி நீச்சல் பயிற்சியாளரான இவர் போலீஸ் துறையிலும், விளையாட்டு துறையிலும் ஏராளமான நீச்சல் சாதனையாளர்களை உருவாக்கி இருக்கிறார். காவல் துறையில் நீச்சல் வீரராக இருந்து பதக்கங்களை வெல்ல தொடங்கியவர், அங்கு தனி நீச்சல் படையையே அமைத்துவிட்டார். காவல் துறையில் ஏற்படுத்தப்பட்ட கருப்பு பூனைப்படைக்கு நீச்சல் பயிற்சி அளித்ததோடு அவர்களை போட்டிகளில் களம் இறக்கி இந்திய அளவில் பல வெற்றிப்பதக்கங்களை அறுவடை செய்யவும் வைத்திருக்கிறார். காவல் துறையினர் மட்டுமின்றி இவரிடம் பயிற்சி பெற்ற வேறு துறையை சேர்ந்தவர்களும், மாணவ-மாணவியரும் தேசிய, மாநில அளவில் பதக்கங்களை குவித்துக்கொண்டிருக்கிறார்கள். மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கும் பிரத்யேக நீச்சல் பயிற்சி வழங்கி அவர்களையும் சாதிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

நீச்சல் வீரர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் நீச்சல் பழகுவது அவசியம் என்று கூறும் முனியாண்டி அதற்கான காரணத்தை விளக்குகிறார்...

‘‘இன்றைய இயந்திர உலகில் ஓய்வின்றி உழைப்பவர்களில் பெரும்பாலானோர் தங்கள் உடல் நலனில் அக்கறை கொள்ளாமல் இருந்துவிடுகிறார்கள். அதனால் கழுத்துவலி, முதுகுவலி, மூட்டுவலி, உடல் சோர்வு என உடலளவில் பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகி விட்டது. இதய நோய் சம்பந்தமான பிரச்சினைகளும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. நீச்சல் பழகினால் இதயம் சீராக இயங்கும். இதய துடிப்பு இயல்பாக இருக்கும். தண்ணீருக்குள் நீந்தும்போது நம்மை அறியாமலேயே சுவாசம் மேம்படும். மூக்கு மட்டுமின்றி வாய்வழியாகவும் சுவாசிக்க தொடங்கிவிடுவோம். வேகமாக நீந்தும்போது வாயும் மூக்கை போல சுவாசத்திற்கான உறுப்பாக செயல்படும். அதனால் இதயமும், நுரையீரலும் வலுப்படும்.

இதய நோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு பலூனை ஊதச் செய்து மூச்சை வாய் வழியாக வெளியிட வைக்கும் மருத்துவ பரிசோதனை இருக்கிறது. பலூனை ஊதும்போது மூச்சை உள்ளேயும், வெளியேயும் இழுப்பது இதயத்துக்கு வலு சேர்க்கும். அதே பணியைத்தான் நீச்சல் செய்கிறது. தொடர்ந்து நீச்சல் பயிற்சி பெற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு இதயம் மட்டுமல்ல மூளையும் சிறப்பாக செயல்படும். ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் உடல் வலி பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். உறுப்புகளின் இணைப்பு பகுதிகளான மூட்டுகளில் அழுத்தம் ஏற்படுவது கை, கால், முதுகு, கழுத்து வலி ஏற்படுவதற்கு காரணம்.

ஒரே வேலையை தொடர்ந்து செய்யும்போது ஒருசில உறுப்புகளைத்தான் அதிகமாக அசைக்க வேண்டியிருக்கும். ஆனால் நீச்சல் பயிற்சி அப்படிப்பட்டதல்ல. தண்ணீருக்குள் நீந்தும்போது உடலின் அத்தனை உறுப்புகளையும் அசைத்தே ஆக வேண்டும். அதனால் அனைத்து உறுப்புகளும் நெகிழ்ந்து சீராக இயங்கத் தொடங்கிவிடும். அதன் காரணமாக ஆரோக்கியமாக வாழலாம். ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் கட்டாய பயிற்சியாக இடம்பிடித்திருக்கிறது. நீச்சல் கற்பது மூளைக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். ஞாபக சக்தியை மேம்படுத்தும். அது படிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணத்தில் நீச்சலை கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். நம் நாட்டிலும் உடற் பயிற்சி வகுப்புகளில் நீச்சலும் ஒரு அங்கமாக இடம்பெற வேண்டும். அதனை கட்டாயமாக்கி பயிற்சி கொடுக்கவும் வேண்டும்’’ என்கிறார்.

மூளை வளர்ச்சி குறைந்த மாணவர் களுக்கு நீச்சலை விட சிறந்த மனோ வளர்ச்சி பயிற்சி வேறு இல்லை என்பது முனியாண்டியின் கருத்தாக இருக்கிறது. இவரிடம் பயிற்சி பெற்ற மூளை வளர்ச்சி குறைபாடுடைய மாணவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்.

‘‘மூளை வளர்ச்சி குறைபாடு உடையவர்களுக்கு எதையும் உடனே புரிந்து கொள்ளும் சிந்தனைத் திறன் இருக்காது. ஒவ்வொரு விஷயத்தையும் மீண்டும் மீண்டும் சொல்லி புரியவைக்க வேண்டி யிருக்கும். நீச்சல் பயிற்சி அவர்களை பக்குவப் படுத்துவதற்கு உதவியாக இருக்கும். தண்ணீருக்குள் தங்களை அறியாமலேயே உடல் உறுப்புகளை வேகமாக அசைப்பார்கள். அப்போது மூளை சுறுசுறுப்புடன் இயங்கி உடல் இயக்கங்களை கட்டுப்படுத்த பழக்கப்படும். தொடர்ந்து நீச்சல் பயிற்சி பெறும்போது மூளை புத்துணர்ச்சியுடன் இயங்கத் தொடங்கும். அப்போது அவர்கள் மனோ வளர்ச்சியில் நல்ல மாற்றம் ஏற்பட தொடங்கிவிடும்.

என்னிடம் பயிற்சி பெற்றுவரும் மூளை வளர்ச்சி குறைபாடுடைய மாணவர்களின் செயல்பாடுகளில் ஒருசில ஆண்டுகளில் நல்ல மாற்றம் ஏற்பட தொடங்கி இருக்கிறது. மன வளர்ச்சி குறைபாடு கொண்டவர்களை வீட்டிற்குள் முடக்கிப்போடக்கூடாது. வீட்டுச்சூழலுக்குள்ளேயே முடக்கி வைப்பது அவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகப்படுத்திவிடும். அவர்களுக்கு நீச்சல் பயிற்சி வழங்கினால் உடலும், மனமும் மேம்படும்’’ என்கிற முனியாண்டி, போட்டிகளில் பங்கேற்பவர்கள் மட்டும்தான் நீச்சல்பயிற்சி பெற வேண்டும் என்ற எண்ணம் நிறைய பேரிடம் இருக்கிறது. எல்லோருக்கும் நீச்சல் அவசியம் என்கிறார்.

‘‘நீச்சலை போல் சிறந்த உடற்பயிற்சி வேறு எதுவும் இல்லை. தினமும் ஒரு மணி நேரம் நீச்சல் பழகினால் வாழ்நாளில் ஒருநாள் அதிகரிக்கும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். நீர் நிலையில் நீச்சல் பழகியவர்களுக்கு தண்ணீரால் ஆபத்து ஏற்படாது. எப்படியும் தப்பிவிடுவார்கள். நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்றால் தலை முடி உதிர்ந்து விடும், சளி தொந்தரவு ஏற்படும், உடல் கறுத்து விடும் என்று நிறைய பேர் கவலைப்படுகிறார்கள். உண்மையில் நீச்சல் பழகுவதால் சளி பிடிக்காது. குளிர்காலத்தில் கூட சளி தொந்தரவு எட்டிப்பார்க்காது. உடல் குளிருக்கு பழக்கப்பட்டுவிடும். வேகமாக நீச்சல் அடிக்கும்போது உடல் வெப்பநிலை கூடும். வியர்க்கவும் செய்யும். வயதானவர்களும் நீச்சல் பயிற்சி பெற வேண்டும். நீரிழிவு, இதயநோய், மூட்டுவலி பிரச்சினைகளில் இருந்து தப்பித்து விடலாம்’’ என்கிறார்.

53 வயதாகும் முனியாண்டி குடும்பத்துடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி முல்லைமலருக்கு 43 வயது. இவர்களுடைய மகள்கள் சண்முக பிரியா, யுவஸ்ரீ இருவரும் மருத்துவம் படித்து வருகிறார்கள். மகன் அபினாஷ் ஸ்ரீகுமார் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இவர்கள் அனைவருமே நீச்சல் பயிற்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். மகள்கள் இருவரும் நீச்சல் வீராங்கனைகளாக மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்று சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். முல்லை மலரும் நீச்சல் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறார். நீண்டகாலமாக இருந்துவந்த முதுகுவலி பிரச்சினைக்கு நீச்சல் பயிற்சிதான் தீர்வு தந்தது என்பவர், பெண்கள் அவசியம் நீச்சல் பழக வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார். இவர்களது குடும்பமே நீச்சல் குடும்பமாகத் திகழ்கிறது.

முல்லை மலர் சொல்கிறார்:

‘‘பல ஆண்டுகளாக எனக்கு முதுகுவலி பிரச்சினை இருந்தது. என் கணவர்தான் நீச்சல் பழகுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை எடுத்துக்கூறினார். முதலில் தயங்கினேன். தண்ணீரில் குதிக்கவும் பயமாக இருந்தது. என் கணவர்தான் என்னை உற்சாகப் படுத்தி நீச்சல் பயிற்சிக்கு பழக்கப்படுத்திவிட்டார். தொடர்ந்து நீச்சல் பழகியதால் முதுகுவலி பிரச்சினையில் இருந்து மீண்டுவிட்டேன். தினமும் நீச்சல் பயிற்சி பெறுகிறேன்.

நீச்சல் பழகுவது சிறந்த மூச்சுப்பயிற்சியாக அமைந்திருக்கிறது. பெண்கள் இன்று வீட்டு வேலை, அலுவலக வேலை என ஓய்வின்றி இயங்குகிறார்கள். பெரும்பாலான பெண்களுக்கு முதுகுவலி பிரச்சினை இருக்கிறது. மூச்சிரைப்பு பிரச்சினையாலும் அவதிப்படுகிறார்கள். தினமும் நீச்சல் பயிற்சி பெற முடியாவிட்டாலும் வார இறுதி நாட்களிலாவது இரண்டு மணி நேரம் செலவிட வேண்டும்.

நீச்சல் உடை அணிவதிலும் நிறைய பெண்களுக்கு தயக்கம் இருக்கிறது. இப்போது கழுத்து முதல் பாதம் வரை மூடும் அளவிற்கு நீச்சல் உடைகள் வந்துவிட்டது. ஐந்து வயதுக்குள்ளாகவே நீச்சல் பழகிவிடுவது நல்லது. அந்த வயதில் பயம் இருக்காது. எளிதாக பழகிவிடலாம். என் குழந்தைகளுக்கு நீச்சல் பல வகையில் பயன் தந் திருக்கிறது. மற்ற குழந்தைகள் ஒரு மணி நேரம் பாடம் படித்தால் இவர்கள் அரை மணி நேரத்திலேயே படித்து முடித்துவிடுவார்கள். என் மகள்கள் நீச்சல் போட்டிகளில் பங்கேற்பதால் படிப்புக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படவில்லை. நீச்சலிலும், படிப்பிலும் சிறந்துவிளங்குகிறார்கள்’’ என்கிறார்.

இந்த குடும்பம் வாழ்க்கையில் மட்டுமல்ல, நீச்சலிலும் சாதிக்கிறது!

Next Story