நாகர்கோவிலில் துணிகரம்: வீட்டில் பணம், செல்போன் திருட்டு மர்ம நபர்களை போலீஸ் தேடுகிறது


நாகர்கோவிலில் துணிகரம்: வீட்டில் பணம், செல்போன் திருட்டு மர்ம நபர்களை போலீஸ் தேடுகிறது
x
தினத்தந்தி 27 Aug 2018 3:45 AM IST (Updated: 26 Aug 2018 9:06 PM IST)
t-max-icont-min-icon

வீட்டில் பணம் மற்றும் செல்போனை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வட்டக்கரையை சேர்ந்தவர் அலோசியஸ் (வயது 54), கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இவரும், இவருடைய மகள் ரேச்சல் (24) என்பவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் ரேச்சல் கழுத்தில் கிடந்த நகையை யாரோ மர்ம நபர்கள் பறிக்க முயன்றனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த ரேச்சல் திருடன்...திருடன்... என்று கூச்சலிட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட மர்ம நபர்கள் வீட்டில் இருந்து தப்பி ஓடினர். சத்தம் கேட்டு அலோசியஸ் விழித்துக் கொண்டார்.

பின்னர் தப்பி ஓடிய மர்ம நபர்களை அவர் பிடிக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். தப்பிச் சென்ற மர்ம நபர்கள் அலோசியஸ் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும், ஒரு செல்போனையும் திருடிச் சென்றுள்ளனர். அதோடு ரேச்சல் கழுத்தில் அணிந்திருந்த நகையையும் பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக ரேச்சல் விழித்துக்கொண்டதால் நகை தப்பியது. அலோசியஸ் வீட்டில் முன்புற கதவின் அருகே ஜன்னல் இருக்கிறது.

அந்த ஜன்னல் வழியாக வீட்டு கதவை மர்ம நபர்கள் திறந்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர். இதுதொடர்பாக நேசமணிநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து வீட்டின் அருகே எங்கேனும் கண்காணிப்பு கேமரா உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story