குப்பைக்கிடங்கில் 5–வது நாளாக எரியும் தீயால் கடும் புகைமூட்டம், கண் எரிச்சலால் பொதுமக்கள் கடும் அவதி


குப்பைக்கிடங்கில் 5–வது நாளாக எரியும் தீயால் கடும் புகைமூட்டம், கண் எரிச்சலால் பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 27 Aug 2018 4:15 AM IST (Updated: 26 Aug 2018 10:31 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை ஜெபமாலைபுரம் பகுதியில் குப்பைக்கிடங்கில் 5–வது நாளாக எரியும் தீயால் புகைமூட்டம் காணப்பட்டது. இதனால் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்றவற்றால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை ஜெபமாலைபுரம் பகுதியில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு உள்ளது. இங்கு தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் உள்ள குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இதனால் இந்த குப்பைக்கிடங்கில் மலைபோல குப்பைகள் குவிந்துள்ளன. நாள்தோறும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டுவதாலும் தொடர்ந்து குப்பைகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ விபத்தும் ஏற்படுவது உண்டு. காற்று பலமாக வீசும் காலக்கட்டத்தில் தொடர்ந்து ஒருவாரம் வரை தீ எரிந்துள்ளது. தீயணைப்பு வீரர்களும் கடுமையாக போராடி தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் இந்த குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்றவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன், வாகனஓட்டிகளும் அந்த பகுதியில் செல்ல முடியாத அளவிற்கு புகைமூட்டம் காணப்படும். அதன்படி கடந்த 22–ந்தேதி குப்பைக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி அணைக்கும் முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனால் அணைக்க முடியவில்லை. தொடர்ந்து தீப்பிடித்து வருகிறது. நேற்று 5–வது நாளாகவும் பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டம் பரவி உள்ளது. ஜெபமாலைபுரம் பகுதிக்கு செல்ல முடியாத அளவிற்கு சாலையில் புகைமூட்டம் காணப்படுகின்றன.

இதனால் வாகனஓட்டிகள், பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டது. மேலும் வாகனஓட்டிகள் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு சாலையை கடந்து சென்றனர். இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

Next Story