தனுஷ்கோடி நினைவு சின்னங்கள் குறித்து மரபு நடை விழிப்புணர்வு பிரசாரம், தொல்லியல் துறையினர் நடத்தினர்
தனுஷ்கோடியில் உள்ள வரலாற்று நினைவு சின்னங்கள் குறித்து தொல்லியல் துறையினர் மரபு நடை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
ராமேசுவரம்,
பழங்கால தொன்மைக்கு எடுத்துக் காட்டாகவும், வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களின் சிறப்பு குறித்தும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தம் வகையில் ராமநாதபுரம் தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மரபு நடை குறித்த நிகழ்ச்சியாக இந்த விழிப்புணர்வு பிரசாரம் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கம்பிபாடு கடற்கரை பகுதியில் வரலாற்று நினைவு சின்னங்களாக உள்ள கட்டிடங்கள் குறித்து மரபு நடை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் தனுஷ்கோடி பகுதியின் சிறப்பு குறித்தும், புயல் பாதிப்பு குறித்தும் ராமநாதபுரம் தொல்லியல் வரலாற்று ஆய்வாளரும், ஆய்வு நிறுவன தலைவருமான ராஜகுரு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலாபயணிளுக்கு விளக்கி கூறினார்.
அப்போது அவர் கூறியதாவது:– மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வரலாற்று தொன்மை வாய்ந்த இடங்கள் உள்ளன. மேலும் ஏராளமான இடங்கள் தொல்லியல் துறையிலே ஆவணப்படுத்தப்படாத இடங்களாக இருந்து வருகின்றன. தற்போது தனுஷ்கோடி பகுதியில் மரபு நடை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 1964–ம் ஆண்டுக்கு முன்பு வரை மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கிய தனுஷ்கோடி, அதே வருடம் டிசம்பர் மாதம் 22–ந்தேதி ஏற்பட்ட கடும் புயலால் கடல் நீர் ஊருக்குள் புகுந்து அழிந்தது. தனுஷ்கோடி பகுதியில் இருந்த அனைத்து கட்டிடங்களும் மண்ணோடு மண்ணாக புதைந்து போயின.
இங்குள்ள கிறிஸ்தவ ஆலயம், இந்து கோவில், பள்ளிக்கூடம், மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களும் பவளப்பாறை கற்களாலும், சுண்ணாம்பு கற்களாலும் கட்டப்பட்டவையாகும். இவ்வாறு சிறப்பு வாய்ந்த தனுஷ்கோடி இன்று மண்ணோடு மண்ணாக காட்சியளித்து வருகிறது. அதன் நினைவு சின்னங்களை பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தனுஷ்கோடி பகுதியில் உள்ள புயலால் சேதமான கட்டிடங்களை பழமை மாறாமல் புனரமைப்பு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையும்,விருப்பமாகும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் அருள்சுப்பிரமணியன், தமோதரன், நிவாஸ்சங்கர் உள்ளிட்ட ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.