கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்பு
நெல்லையில் நடந்த கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
நெல்லை,
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தி.மு.க. சார்பில் நெல்லை பாளையங்கோட்டை கோர்ட்டு எதிரே உள்ள பெல் மைதானத்தில் புகழ் வணக்க கூட்டம் நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. “அரசியல் ஆளுமை: கலைஞர்” என்ற தலைப்பில் இந்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சி மாநில பொது செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
முன்னதாக கூட்ட மேடையில் கருணாநிதி படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. கருணாநிதியின் படத்திற்கு கி.வீரமணி தலைமையில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட தி.மு.க. முன்னணி தலைவர்கள் முதல் வரிசையில் உட்கார்ந்து தலைவர்களின் பேச்சை கேட்டனர்.
கூட்டத்தில், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.தேவர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கொங்குநாடு மக்கள் கட்சி நிர்வாகி சூரியமூர்த்தி, பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், பொன்.குமார், சமூக நீதி இயக்க தலைவர் எஸ்றா.சற்குணம், செல்லமுத்து, தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், அதிசயமான், பஷீர் அகமது, அம்மாசி, கிறிஸ்தவ நல்லிணக்க தலைவர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோரும் பேசினர். கூட்டத்தில், முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, பீட்டர் அல்போன்ஸ் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story