10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தமிழர் விடுதலைப்படையை சேர்ந்தவர் கைது
நெல்லையில் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தமிழர் விடுதலைப் படையை சேர்ந்த வரை கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
வடலூர் கோட்டக்கரையை சேர்ந்தவர் சிங்காரவடிவேல்(வயது 43). இவர் மீது வடலூர், பரங்கிப்பேட்டை, விருத்தாசலம், நெய்வேலி போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள், கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தமிழர் விடுதலைப்படை அமைப்பில் இருந்த சிங்காரவடிவேல் கடந்த 2008-ம் ஆண்டு முதல் திடீரென தலைமறைவானார். இதனால் அவர் மீதுள்ள வழக்குகள் அனைத்தும் நிலுவையில் இருந்தன. இதையடுத்து சிங்காரவடிவேலை கடலூர் மாவட்ட போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கவில்லை.
சிங்காரவடிவேலு உள்ள இடத்தை கண்டுபிடித்து, அவரை கைது செய்ய டெல்டா பிரிவு போலீசாருக்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டார். அதன் பேரில் டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
அப்போது நெல்லை மாவட்டம் தாழையூத்து என்ற இடத்தில் தலைமறைவாக வசித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சிங்காரவடிவேலுவை கைது செய்தனர். வடலூரில் இருந்து மாயமான இவர் தாழையூத்து பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து லாரி டிரைவராக வேலை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிங்காரவடிவேலுவை டெல்டா பிரிவு போலீசார் கடலூர் மாவட்டத்துக்கு அழைத்து வந்து வடலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிங்காரவடிவேலுவை கைது செய்த டெல்டா பிரிவு போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாராட்டினார்.
Related Tags :
Next Story