தண்ணீர் பற்றாக்குறையால் கடைமடை பகுதியில் கேள்விக்குறியாகும் தென்னை சாகுபடி விவசாயிகள் விரக்தி


தண்ணீர் பற்றாக்குறையால் கடைமடை பகுதியில் கேள்விக்குறியாகும் தென்னை சாகுபடி விவசாயிகள் விரக்தி
x
தினத்தந்தி 27 Aug 2018 4:15 AM IST (Updated: 27 Aug 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் பற்றாக்குறையால் கடைமடை பகுதியில் தென்னை சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது. தென்னை மரங்கள் பட்டுப்போவதை தடுக்க முடியாமல் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் 60 ஆயிரம் எக்டேரில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைமடை பகுதியில் உள்ள சேதுபாவாசத்திரம் பகுதியில் மட்டும் 6,600 எக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதியை வந்தடையாததால், இப்பகுதியில் ஒரு போகம் சம்பா சாகுபடியை கூட விவசாயிகளால் மேற்கொள்ள முடியவில்லை. தண்ணீர் பற்றாக்குறையால் நெல் சாகுபடி கைவிடப்பட்ட நிலையில் தென்னை சாகுபடியை மட்டும் நம்பி, கடைமடை பகுதியில் விவசாய தொழில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் போதிய அளவு மழை பெய்யாததால் கடைமடை பகுதியில் தென்னை மரங்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. பல இடங்களில் தென்னை மரங்கள் பட்டுப்போக தொடங்கி விட்டன. மரங்கள் பட்டுப்போவதை தடுக்க முடியாமல் விவசாயிகள் விரக்திக்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடைமடை பகுதியில் தென்னை சாகுபடி தொடர்ந்து நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து கிடைக்க வேண்டிய தண்ணீரும் கிடைக்கவில்லை. எதிர்பார்த்த அளவு மழையும் பெய்யவில்லை. இதனால் கடைமடை பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது.

மின்மோட்டாரை பயன்படுத்தி தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. ஒரு சில இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் 80 அடியில் இருந்து 250 அடிக்கு கீழே சென்றுவிட்டது.

இதன் காரணமாக தென்னை மரங்கள் பட்டுப்போவதை தடுக்க முடியவில்லை. மேட்டூர் அணை தண்ணீர் மூலமாக கடைமடை பகுதியில் உள்ள ஏரி, குளங்களை நிரப்பினால் தான் தென்னை சாகுபடியை தொடர்ந்து சிரமமின்றி மேற்கொள்ள முடியும். கடைமடை பகுதியில் பெரும்பாலான விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக திகழ்ந்து வரும் தென்னை சாகுபடியை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story