குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தொடர்பான புகார்களை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தொடர்பான புகார்களை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், பாதுகாப்பற்ற தொடுதல் குறித்தும், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் www.nc-p-cr.gov.in என்ற வலைதளத்தில் மின்னணு புகார் பெட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் நடைபெற்ற இடம், குற்றம் செய்த நபர், தொடர்பு எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் குழந்தைகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம்.
மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றால் அதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட வேண்டும். புகார் அளிக்க தவறும் நபர்கள் மற்றும் புகாரை பதிவு செய்ய மறுக்கும், தவறும் அலுவலர்களுக்கு பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 6 மாதம் முதல் ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story