மாவட்ட செய்திகள்

முக்கொம்பு கொள்ளிடம் அணையில் தண்ணீர் வீணாவதை தடுக்க பொக்லைன் எந்திரம் மூலம் ஆற்றில் ஆழப்படுத்தும் பணி + "||" + Deepening the river through a pokeline machine to prevent the water from falling into the dam

முக்கொம்பு கொள்ளிடம் அணையில் தண்ணீர் வீணாவதை தடுக்க பொக்லைன் எந்திரம் மூலம் ஆற்றில் ஆழப்படுத்தும் பணி

முக்கொம்பு கொள்ளிடம் அணையில் தண்ணீர் வீணாவதை தடுக்க பொக்லைன் எந்திரம் மூலம் ஆற்றில் ஆழப்படுத்தும் பணி
முக்கொம்பு மேலணையில் தண்ணீர் வீணாவதை தடுக்க மிதவை பொக்லைன் எந்திரம் மூலம் காவிரி ஆற்றில் ஆழப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.
ஜீயபுரம்,

மேட்டூரில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணை வழியாக திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை வந்தடைகிறது. மேலணையில் இருந்து காவிரி ஆற்றிற்கும், கொள்ளிடம் ஆற்றிற்கும் தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றிற்கு பிரித்து அனுப்பப்படும் அணைப்பகுதியில் கடந்த 22-ந்தேதி இரவு 9 மதகுகள் உடைந்தன. இதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.


மதகுகள் உடைந்த பகுதி வழியாக அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. ஆனால் இந்த தண்ணீரால் கொள்ளிடம் ஆற்றில் எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும் அணையில் சேமித்து வைக்கப்பட வேண்டிய தண்ணீர் வீணாகி வருவதை எண்ணி விவசாயிகளும், பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர். அணையில் தண்ணீரை சேமித்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மணல் மூட்டைகள் கொண்டு கொள்ளிடம் அணைப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 220 மீட்டர் வரை தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. லட்சக்கணக்கான மணல் மூட்டைகள் கொள்ளிடம் அணையின் மேல் பகுதியில் தண்ணீரில் அடுக்கி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணியில் பகல், இரவில் தலா 300 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகளும் முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொள்ளிடம் அணையில் இருந்து தண்ணீர் வீணாவதை தடுக்க அணையின் மேற்கு பகுதியில் காவிரி ஆற்றில் மேடான பகுதியில் ஆழப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட மிதவை பொக்லைன் எந்திரம் மூலம் அணையின் மேற்கு பகுதியில் காவிரி ஆற்றில் நேற்று காலை முதல் ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் கொள்ளிடம் அணை பகுதிக்கு செல்லக்கூடிய தண்ணீர் காவிரி அணைப்பகுதிக்கு சென்றடையும்.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை தீவிரமடைந்துள்ளதால் அங்கிருந்து அணைகளில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டால் அதனை முக்கொம்பு காவிரி மேலணை பகுதியில் காவிரி ஆற்றில் திறக்க ஏற்பாடு செய்துவருகின்றனர். கொள்ளிடம் அணையில் கிழக்கு பகுதியில் 100 மீட்டர் தள்ளி புதிய அணை கட்டப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதற்கான பணிகளும் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. நிபுணர்குழுவினர் கொள்ளிடம் ஆற்றில் நேற்று நில அளவீடு பணியில் ஈடுபட்டனர்.

முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைந்த மதகுகளை மனித நேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. நேற்று மாலை பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், “சேதமடைந்த மதகுகளை சீரமைக்கும் பணியை துரிதமாக எடுத்ததற்கு தமிழக அரசிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதேநேரத்தில் காவிரியில் டெல்டா மாவட்ட பகுதிகளில் கடைமடைக்கு இன்னும் தண்ணீர் வந்தடையவில்லை. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். கடைமடைக்கு தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆறுகள், அணைக்கட்டு பகுதிகளில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும். காவிரி ஆறு பகுதிகளில் மணல் அள்ள நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்‘” என்றார்.