காதலனுடன் ஓட்டம் பிடிக்கும் பள்ளி மாணவிகள்: திருப்பூரில் கள்ளத்தொடர்பால் மாயமானவர்கள் வழக்குகள் அதிகரிப்பு
திருப்பூரில் கள்ளத்தொடர்பால் மாயமானவர்கள் குறித்த வழக்குகள் அதிகரித்துள்ளது. அதுபோல் காதலனுடன் பள்ளி மாணவிகள் ஓட்டம் பிடிக்கும் சம்பவமும் பெருகி வருகிறது. இதுபோன்ற கலாசார சீரழிவுகளை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்,
பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில் தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்கள். உழைப்புக்கு பெயர் பெற்ற திருப்பூர் மாநகரம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் தொழிலாளர்களின் கடின உழைப்பால் வர்த்தக மேம்பாடு அடைந்துள்ளது. தொழில் வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், குற்ற சம்பவங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.
கள்ளத்தொடர்பு காரணமாக வீட்டை விட்டு பெண்கள் வெளியேறும் சம்பவங்களும் சமீபத்தில் அதிகரித்துள்ளது வேதனையான விஷயமாகும். திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் ஆண்களும், பெண்களும் சேர்ந்தே பணியாற்றக்கூடிய சூழல் உள்ளது. இதனால் நெருக்கமாக பேசி பழகும் வாய்ப்பு கிடைப்பதால், நாளடைவில் அது கள்ளத்தொடர்பாக உருவெடுத்து விடுகிறது. திருமணமான ஆண்கள், பெண்கள் தங்கள் குடும்பம், குழந்தைகளை விட்டு விட்டு கள்ளத்தொடர்பு காரணமாக மாயமாகும் கலாசார சீரழிவு சம்பவங்கள் மாநகர போலீசாரை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.
அதுபோல் பள்ளிப்பருவ மாணவிகள் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மே மாதம் இதுபோன்ற மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறி தங்கள் காதலனுடன் சென்ற சம்பவங்கள் இங்கு ஏராளம். திருப்பூர் மாநகரில் இதுபோல் கள்ளக்காதல் சம்பவம், மாணவிகள் காதலனுடன் ஓட்டம் போன்றவற்றால் ஆண்டுக்கு 250 பேர் மாயமானதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த 7½ மாதங்களுக்குள் 250 பேரை தாண்டிவிட்டது.
குறிப்பாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய பகுதியில் கடந்த 2016–ம் ஆண்டு 135 பேரும், 2017–ம் ஆண்டு 120 பேரும் மாயமாகியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த 7½ மாதங்களில் மட்டும் 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியாக வடக்கு போலீஸ் நிலைய பகுதி இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மற்ற மாவட்டங்களை விட திருப்பூரில் தான் இது போன்ற வழக்குகள் அதிகமாக உள்ளதாக போலீசார் புலம்பி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
பெண்கள் மாயமானதாக வரும் புகார்களில் கள்ளத்தொடர்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேறியவர்கள் தான் அதிகம் உள்ளனர். திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் ஆண்களும், பெண்களும் கடின உழைப்பை செலுத்துகிறார்கள். இதனால் வீட்டில் கணவன்–மனைவிக்கு இடையே கொஞ்சி பேசும் வாய்ப்பு என்பது குறைந்து விட்டது.
பல ஆண்களுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் வீட்டில் மனைவியுடன் பேசுவது, நேரத்தை செலவு செய்வது கூட கிடையாது. ஆனால் அதே நேரம் இந்த பெண்கள் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும்போது, தங்களுடன் பணியாற்றும் ஆண்கள் அவர்களுடன் சிரித்தும், சுக துக்கத்தில் பங்கெடுப்பது போல் பேசும்போது எளிதில் அவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி விடுகிறது. குடும்பத்தில் கணவன் பல்வேறு சிக்கல்களில் சிக்கி இருப்பதால் மனைவியிடம் சிரித்து பேச முடியாத நிலை கூட ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் அந்த பெண்கள் அதைப்பற்றி நினைப்பது கிடையாது. கணவரை விட தன்னுடன் பணியாற்றும் ஆண், தன் மீது மிகவும் அக்கறை கொண்டு உள்ளதாக நினைத்து அவர்களுடன் தகாத உறவுக்கு அடிபணிந்து விடுகிறார்கள். இவர்களுக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் இருந்தாலும் கூட தங்கள் குடும்பத்தை பற்றியெல்லாம் நினைக்காமல் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்கள். இதனால் 2 குடும்பமும் பாழாகி விடுகிறது.
பள்ளி பருவ மாணவிகள் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு செல்கிறார்கள். மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்போது முதலில் உண்மையான காரணத்தை தெரிவிப்பது கிடையாது. போலீசார் வழக்குப்பதிவு செய்து துருவி, துருவி விசாரணை நடத்தும்போது தான் அந்த மாணவி அப்பகுதியில் உள்ள வாலிபருடன் மாயமான விவரம் தெரியவரும். பின்னர் அதுபற்றிய விவரத்தை மாணவியின் பெற்றோரிடம் விசாரித்தால் ஏற்கனவே அந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்ட விவரம், அவர்கள் கண்டித்த விவரம் அனைத்தையும் கூறுவார்கள். ஆனால் அவற்றையெல்லாம் மறைத்து போலீசில் தெரிவிப்பதால் துப்பு துலக்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சில வாரங்களுக்கு பிறகே மாணவியை மீட்க முடிகிறது.
பெற்றோர் தங்கள் மகள் பற்றி தெரிந்த விவரத்தை காவல்துறைக்கு முழுமையாக தெரிவித்தால் மட்டுமே அவர்களை மீட்பதில் சுணக்கம் இருக்காது. அவ்வாறு மீட்டு கொண்டு வந்து கோர்ட்டில் ஒப்படைக்கும் பணியை போலீசார் மேற்கொள்கிறார்கள். பெரும்பாலான பெற்றோர் தங்கள் மகளை தங்களுடன் அழைத்து செல்வதில் குறியாக உள்ளார்கள். மகளை அழைத்துச்சென்ற வாலிபர் மீது புகார் எதுவும் கொடுப்பதில்லை. சமூகத்தில் தங்களுக்கு அவமானம் ஏற்படும் என்பதால் தங்கள் மகள் கிடைத்தால் போதும் என்று சென்று விடுகிறார்கள். இதனால் காதல் என்பதை கையில் எடுத்து அப்பாவி மாணவிகளை சீரழிக்கும் இளைஞர்கள் தண்டனை எதுவும் இல்லாமல் தப்பித்து விடுகிறார்கள். இந்த கலாசார சீரழிவை தடுக்கும் வகையில் பள்ளி மாணவிகளுக்கு தகுந்த உளவியல் ஆலோசனைகள் வழங்குவது அவசியம். அதுபோல் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கும் ஒழுக்க முறை குறித்து ஆலோசனைகள் கண்டிப்பாக வழங்க வேண்டும். அப்போதுதான் கலாசார சீரழிவை தடுக்க முடியும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
கல்வித்துறை அதிகாரிகள் மூலமாக மாணவிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கவும், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தகுந்த ஆலோசனைகள் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.