அரசு பஸ்களில் டிரைவர், கண்டக்டர்களை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தக்கோரி வழக்கு
அரசு பஸ்களில் டிரைவர், கண்டக்டர்களை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தக்கோரி வழக்கில் போக்குவரத்து துறை செயலாளர் பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியை சேர்ந்த ஜோசப், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
தமிழகத்தில் சுமார் 6½ கோடி பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்தை சார்ந்தே உள்ளனர். நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்காக சேவை நோக்கத்தில் அரசு போக்குவரத்து கழகம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் நோக்கத்தை மீறி ஏழை மக்கள் பாதிக்கும் அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பஸ்களில் முதலுதவி பெட்டி வைப்பதில்லை. பயணிகளை மதிப்பதில்லை. பல நேரங்களில் சில்லறை தராமல் இழுத்தடிக்கின்றனர். இறங்க வேண்டிய பயணிகளுக்கு இடத்தை முன்கூட்டியே தெரிவிப்பதில்லை. சரியான நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்துவதில்லை. கூட்ட நேரங்களில் குழந்தைகள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. பஸ்களை முறையாகவும் பராமரிப்பதில்லை. எனவே, அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் சேவை நோக்குடன் பணியாற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க அனைத்து அரசு பஸ்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு போக்குவரத்து துறை செயலாளர், அனைத்து போக்குவரத்து கழக மண்டல மேலாண்மை இயக்குனர்களுக்கு கடந்த ஏப்ரல் மதம் 19–ந்தேதி புகார் மனு அனுப்பினேன். இதுவரை எந்த விதமான பதிலும் இல்லை. எனவே எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல் ஒய்.ஜேக்கப் ஆஜரானார். முடிவில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:– மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசின் போக்குவரத்துக்கழக செயலாளர் பரிசீலித்து 8 வாரத்திற்குள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதுகுறித்து மனுதாரருக்கு உரிய தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.