வாஜ்பாய் அஸ்தி கன்னியாகுமரி கடலில் கரைப்பு


வாஜ்பாய் அஸ்தி கன்னியாகுமரி கடலில் கரைப்பு
x
தினத்தந்தி 26 Aug 2018 11:15 PM GMT (Updated: 26 Aug 2018 8:59 PM GMT)

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கன்னியாகுமரி கடலில் நேற்று கரைக்கப்பட்டது.

கன்னியாகுமரி,

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது அஸ்தியை நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளில் கரைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகத்தில் கன்னியாகுமரி, ராமேசுவரம் உள்ளிட்ட 7 இடங்களில் அஸ்தியை கரைப்பதற்காக பா.ஜனதாவினர் எடுத்து வந்தனர்.

கன்னியாகுமரி கடலில் கரைப்பதற்காக அஸ்தி கலசத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்றுமுன்தினம் மாலை குமரி மாவட்டத்துக்கு எடுத்து வந்தார். பிறகு அஸ்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், அஸ்தி கலசம் மீண்டும் நாகர்கோவில் கொண்டு வரப்பட்டு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு பொதுமக்கள் விடிய-விடிய அஞ்சலி செலுத்தினர்.

நேற்று காலையில் பா.ஜனதா நிர்வாகிகள் கணேசன், மீனாதேவ், தேவ், தர்மலிங்கம் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க. சார்பில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன், அவைத் தலைவர் சேவியர் மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், நகர செயலாளர் சந்திரன் மற்றும் தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில், நகர செயலாளர் மகேஷ் உள்பட பலர் மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வாஜ்பாய் அஸ்தி கன்னியாகுமரிக்கு எடுத்து செல்லப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தின் முன் பா.ஜனதா நிர்வாகிகள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், ஈத்தங்காடு, கொட்டாரம், விவேகானந்தபுரம் வழியாக கன்னியாகுமரி சென்றடைந்தது.

அங்கு நான்கு வழிச்சாலை முடிவடையும் பகுதியில் மேடை அமைக்கப்பட்டு அதில் வாஜ்பாய் அஸ்தி வைக்கப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் மரியாதை செலுத்தினர். பின்னர் கன்னியாகுமரி கடற்கரையில் வாஜ்பாய் அஸ்தி கலசம் கொண்டு செல்லப்பட்டது. கடற்கரையில் உள்ள 16 கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு புரோகிதர்களை கொண்டு சடங்குகள் நடத்தப்பட்டன.

பின்னர் அஸ்தி கலசத்தை மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தலையில் சுமந்தபடி மூன்று முறை வலம் வந்தார். பிறகு அஸ்தி கலசத்துடன் கடலுக்குள் இறங்கினார். அங்கு கலசத்துடன் மூழ்கி அஸ்தியை கடலில் கரைத்தார். தொடர்ந்து கரையில் நின்றவர்கள் கடலில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story