தர்மபுரியில் நடந்த மாநில அளவிலான ஜூனியர் பெண்கள் கபடி போட்டியில் திண்டுக்கல் அணி சாம்பியன்


தர்மபுரியில் நடந்த மாநில அளவிலான ஜூனியர் பெண்கள் கபடி போட்டியில் திண்டுக்கல் அணி சாம்பியன்
x
தினத்தந்தி 26 Aug 2018 10:45 PM GMT (Updated: 26 Aug 2018 9:38 PM GMT)

தர்மபுரியில் நடந்த மாநில அளவிலான ஜூனியர் பெண்கள் கபடி போட்டியில் திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. திருப்பூர் அணி 2-ம் இடம் பிடித்தது.

தர்மபுரி,

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் தர்மபுரி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் ஆகியவற்றின் சார்பில் 45-வது தமிழ்நாடு மாநில ஜூனியர் பெண்கள் கபடி போட்டி மற்றும் சாம்பியன் பட்ட போட்டி தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. மின்னொளியில் நடைபெற்ற இந்த போட்டிகளில் தமிழகத்தில் 29 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. பல சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டிகளின் முடிவில் திண்டுக்கல், திருப்பூர் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்த அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி நேற்று இரவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியின் முடிவில் 42 புள்ளிகளை பெற்ற திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. திருப்பூர் அணி 22 புள்ளிகளை பெற்று 2-ம் இடம் பிடித்தது. மதுரை, கரூர் மாவட்ட அணிகள் 3-ம் இடத்தை பிடித்தன.

இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு தர்மபுரி மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் பி.பாஸ்கர் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம் வரவேற்று பேசினார். விழாவில் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக தலைவர் சோலைராஜா, மாநில பொதுச்செயலாளர் சபியுல்லா, பொருளாளர் சண்முகம், அமைப்பு செயலாளர் ராஜராஜேந்திரன், கபடி கழக சேர்மன் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்ற திண்டுக்கல் அணிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பரிசுகளும், 2-ம் இடம் பிடித்த திருப்பூர் அணிக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பரிசுகளும், 3-ம் இடம் பிடித்த மதுரை, கரூர் அணிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பரிசுகளும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்த விழாவில் விளையாட்டு துறையை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 2½ சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தர்மபுரி மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் பி.பாஸ்கர் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதில், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாந்தமூர்த்தி, கபடி கழக துணைத்தலைவர் இளங்கோ, அமைப்புசெயலாளர் முத்துராஜன், முன்னாள் கவுன்சிலர் காவேரி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் அமெச்சூர் கபடி கழக செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார். இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள் கொல்கத்தாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கபடி போட்டிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Next Story