மணலி புதுநகரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் பிரபல ரவுடி கைது


மணலி புதுநகரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் பிரபல ரவுடி கைது
x
தினத்தந்தி 27 Aug 2018 4:29 AM IST (Updated: 27 Aug 2018 4:29 AM IST)
t-max-icont-min-icon

மணலி புதுநகரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் ரவுடி கைது செய்யப்பட்டார். இவர் கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள ஆண்டார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குமரன் (வயது 48), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் வேலை முடித்து விட்டு திருவொற்றியூர்- பொன்னேரி நெடுஞ்சாலை நாப்பாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் குமரனை கத்தியை காட்டி மிரட்டி, கையால் தாக்கி ரூ.2 ஆயிரத்து 460-ஐ பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து குமரன் மணலி புதுநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டவர் ரவுடியான எண்ணூரை சேர்ந்த தனசேகரன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் வடக்கு மண்டல இணை கமிஷனர், மணலி புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர், வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தனசேகரனை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாப்பாளையம் அருகே வேகமாக வந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அந்த காரில் தனசேகரன் இருந்தார். போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற அவர் கால் தவறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த தனசேகரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 500, கத்தி மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் எண்ணூர், மணலி பகுதிகளில் உள்ள நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்ததும், அவர் மீது 2004-ம் ஆண்டு எண்ணூரை சேர்ந்த காளி என்கிற காளஸ்வரன், 2005-ம் ஆண்டு செங்குன்றத்தை சேர்ந்த கருப்புராஜா, 2009-ம் ஆண்டு பெரியமுத்து மற்றும் குற்றப்பின்னணி நபரான வடகரை சக்தியின் சகோதரரான அசோக், மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல் மின்நிலைய நுழைவு வாயில் முன்பு எண்ணூரை சார்ந்த ஜேம்ஸ் ஆகியோரை கொலை செய்த வழக்குகள் உள்பட 7 கொலை வழக்குகளும், 4 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 40 குற்ற வழக்குகளும் உள்ளது தெரியவந்தது.

மேலும் அவர் 5 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் தெரிந்தது. இதனை தொடர்ந்து மணலி புதுநகர் போலீசார் அவரை பொன்னேரி குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் தனசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தஞ்சாவூரை சேர்ந்த மதி, உளுந்தூர்பேட்டையை சேர்ந்த மும்மூர்த்தி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story