தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு தொழிலாளி உள்பட 2 பேர் மீது தாக்குதல்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு தொழிலாளி உள்பட 2 பேர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 27 Aug 2018 3:30 AM IST (Updated: 27 Aug 2018 4:54 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பில் வேலை செய்யும் தொழிலாளி உள்பட 2 பேர் மீது தாக்குதல் நடந்தது. மேலும், அவர்களது உறவினர் வீடு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி, 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி அ.குமரெட்டியபுரத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 19). இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிலாளர்கள் குடியிருப்பு கேண்டீனில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய தாய் ஜெயா, அதே கேண்டீனில் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் ஜெயா அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த ராமசாமியின் மகன் பெத்திராஜ், முருகபெருமாள் மகன் பாபுராஜ் ஆகியோர் ஸ்டெர்லைட் குடியிருப்பில் ஜெயா வேலை செய்வதை கேலி செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் வீட்டுக்கு சென்ற ஜெயா, பெத்திராஜ், பாபுராஜ் ஆகியோர் வீடுகளுக்கு சென்று சத்தம் போட்டுள்ளார். அப்போது ஜெயாவின் மகன் மணிகண்டன், அக்காள் மகன் ராம்குமார் ஆகியோர் அங்கு வந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில், பெத்திராஜ், பாபுராஜ் ஆகியோர் சேர்ந்து மணிகண்டன், ராம்குமார் ஆகிய இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் பெத்திராஜ், பாபுராஜ் ஆகியோர் மீது சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
அதேபோல் பாபுராஜ் மனைவி தமிழ்செல்வி அளித்த புகாரின்பேரில், ஜெயா (45), மணிகண்டன் (19), ராம்குமார் (21), மாடசாமி ஆகிய 4 பேர் மீதும், அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலையில் அ.குமரெட்டியபுரம் கீழத்தெருவில் உள்ள மணிகண்டனின் உறவினர் கந்தசாமி (90) என்பவர் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டு உள்ளது.
மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என சிப்காட் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story