உண்மையை மறைக்க முயற்சி: பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும்


உண்மையை மறைக்க முயற்சி: பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும்
x
தினத்தந்தி 27 Aug 2018 3:45 AM IST (Updated: 27 Aug 2018 4:59 AM IST)
t-max-icont-min-icon

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாலகிருஷ்ணன் கூறினார்.

நெல்லை, 

நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஐகோர்ட்டில், அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக கூறி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வாக்குமூலத்தை தாக்கல் செய்து உள்ளனர். இதில் நிர்மலாதேவி அளித்ததாக கூறப்படுகின்ற வாக்குமூலம் நம்பும்படியாக இல்லை. உண்மையை மறைக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், தமிழக அரசும் முயல்கிறது. இதை ஐகோர்ட்டு ஏற்கக்கூடாது. நிர்மலாதேவி விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மீது வந்து உள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்துவதாக அரசு சார்பில் கோர்ட்டில் தெரிவித்து உள்ளனர். முதல்-அமைச்சர் மீதான குற்றச்சாட்டை அவருடைய கட்டுப்பாட்டில் உள்ள போலீசார் விசாரணை நடத்துவது சரியாக இருக்காது. எனவே, இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை முடியும் வரை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவி விலகவேண்டும்.

தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டங்கள் சரியாக இல்லை. மேலும் பழமையான அணைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் தான் முக்கொம்பு அணை உடைந்து உள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளின் தரம் எப்படி உள்ளது என்பதை ஆராய ஒரு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வுக்கு பின்னர் அனைத்து அணைகளையும் மாற்றி கட்டுவதற்கு திட்டம் வகுக்க வேண்டும். அனைத்து ஆறுகளிலும் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும்.

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. ஆனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் வறண்டு கிடக்கின்றன. எனவே, இதுகுறித்து உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து ஆய்வு நடத்தி அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பேச்சு, எழுத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு உள்ளது. இதை கண்டித்து அடுத்த மாதம் முழுவதும் ஆயிரம் இடங்களில் தெருமுனை பிரசார கூட்டம் நடத்தப்படும்.

தமிழகத்தை பொருத்த வரை பாரதீய ஜனதா கட்சி மூழ்கும் கப்பலாக உள்ளது. அந்த கட்சியுடன் இணைபவர்களும் மூழ்கிவிடுவார்கள். மக்களை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற பாரதீய ஜனதா கட்சியையும், அ.தி.மு.க.வையும் வீழ்த்த அரசியல் உத்திகளை வகுத்து வருகிறோம்.
யாருடன் கூட்டணி வைப்பது என்று பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். அப்போது யார் யார் ஒன்று சேர்வார்கள்? என்று தெரியும். இந்திய அளவில் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட அரசியல் உள்ளது. 3-வது அணி அமைந்தால் அது பாரதீய ஜனதாவுக்கு சாதகமாகிவிடும். எனவே, அது தேவையில்லாதது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, மாவட்ட செயலாளர் பாஸ்கரன், முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story