வேலூர் கோட்டை அகழியில் செத்து மிதக்கும் மீன்கள் அதிகாரிகள் விசாரணை


வேலூர் கோட்டை அகழியில் செத்து மிதக்கும் மீன்கள் அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 27 Aug 2018 5:42 AM IST (Updated: 27 Aug 2018 5:42 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் கோட்டை அகழியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்,

தமிழகத்தில் உள்ள தரைக்கோட்டைகளில் சிறந்த கோட்டையாக வேலூர் கோட்டை திகழ்கிறது. இக்கோட்டை வேலூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 133 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோட்டைக்கு செல்ல கிழக்குப்பகுதியில் நுழைவு வாயில் அமைந்துள்ளது.

இக்கோட்டை பழமை மாறாமல் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோட்டையை சுற்றிலும் சுமார் 200 அடி அகலமும், 25 அடி ஆழமும் கொண்ட அகழி அமைந்துள்ளது. அகழியை மீன்வளத்துறை பராமரித்து வருகிறது. இந்த அகழி சரியாக பராமரிக்கப்படாததால் அதில் குப்பைகள் காணப்படுகின்றன.

இந்த நிலையில் கோட்டை அகழியில் நேற்று ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனை காலையில் கோட்டைக்கு நடைபயிற்சிக்கு சென்றவர்கள், கோட்டையை சுற்றிப்பார்க்க சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அகழியில் செத்து மிதந்த மீன்களை கொக்கு, நாரை போன்ற பறவைகள் கொத்தி செல்கின்றன.

மீன்கள் செத்து மிதப்பதற்கு அகழியில் ஏதும் ரசாயனம் கலந்தது காரணமா? அல்லது விஷமிகள் இதற்கு காரணமா? என்பது தெரியவில்லை. தகவல் அறிந்த தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

இதுதொடர்பாக தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் கோட்டை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கோட்டையில் உள்ள அகழி மட்டும் மீன்வளத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் காணப்படும் மீன்களை மீன்வளத்துறையினர் பிடித்து வருகின்றனர். தற்போது அகழியில் மீன்கள் செத்து மிதப்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்” என்றனர்.

இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாநகரில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. நேற்று முன்தினம் மதியம் 99.9 டிகிரி வெயில் அளவு பதிவானது. இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் பலத்த மழை பெய்தது.

திடீர் கால சூழ்நிலை மாற்றம் மற்றும் தொடர்ந்து 3 மணி நேரம் பெய்த மழையின் காரணமாக ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டு மீன்கள் செத்து மிதக்க வாய்ப்புள்ளது. மழையின் காரணமாக அகழிக்கு கழிவுநீரோடு மழைநீர் வந்து சேர்ந்திருக்கலாம். கழிவுநீரில் ரசாயன கழிவுகள் ஏதேனும் கலந்து வந்ததா?, அதனால் மீன்கள் செத்தனவா? என்று விசாரணை நடத்தி வருகிறோம். அகழியில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

அகழியில் செத்து மிதக்கும் மீன்கள் அழுகி துர்நாற்றம் வீசுவதற்கு முன்பாக அவற்றை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story