ஆனைமலை அருகே நண்பரின் தலையில் கல்லை போட்டு கொன்ற கட்டிட தொழிலாளி கைது
ஆனைமலை அருகே நண்பரின் தலையில் கல்லை போட்டு கொன்ற கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஆனைமலை,
ஆனைமலை அருகே உள்ள தாத்தூரை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. இவர் ஆனைமலையில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் விக்னேஷ்குமார் (வயது 25), புகைப்பட கலைஞர். அதேபகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் ஹரிகிருஷ்ணன் (22), கட்டிட தொழிலாளி. இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர்.
நேற்று முன்தினம் இரவு ஆனைமலை பகுதியில் உள்ள மில் ஒன்றின் அருகே அவர்கள் 2 பேரும் மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஹரிகிருஷ்ணன் அருகே இருந்த பெரிய கல்லை எடுத்து விக்னேஷ்குமாரின் தலையில் போட்டுள்ளார். இதில் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே விக்னேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆனைமலை இன்ஸ்பெக்டர் அம்மாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் விக்னேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதனைதொடர்ந்து அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் நின்று இருந்த ஹரிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:–
ஹரி கிருஷ்ணனுக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்து உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது அக்காள் கணவரை அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்ய முயற்சி செய்து உள்ளார். இதில், உயிர் தப்பிய அவர் ஆனைமலை போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிகிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது நண்பரான விக்னேஷ்குமாருடன் மது அருந்தி உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் தனது நண்பர் என்றும் பாராமல் அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஹரிகிருஷ்ணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.