திருபுவனை அருகே விவசாய பம்பு செட் தொட்டியில் குளித்த வாலிபர் சாவு
திருபுவனை அருகே விவசாய மோட்டார் பம்பு செட் தொட்டியில் குளித்த வாலிபர் பரிதாபமாகச் செத்தார். அவருடைய உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வேன் வராததால் கிராம மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருபுவனை,
திருபுவனையை அடுத்த திருவண்டார்கோவில் சின்னபேட் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மகன் தவக்குமார் (வயது 29), கூலி தொழிலாளி. இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
வாலிபர் தேவக்குமார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள விவசாய மோட்டார் பம்புசெட் தொட்டிக்கு குளிக்கச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பிவரவில்லை.
அதனால் சந்தேகம் அடைந்த அவருடைய குடும்பத்தினர் மோட்டார் பம்புசெட் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது பம்பு செட் தொட்டியில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் தவக்குமார் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதுபற்றி தகவல் அறிந்ததும் திருபுவனை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தவக்குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
தவக்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வேனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வேன் வராததால் அப்பகுதி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.
பின்னர் ஆம்புலன்ஸ் வேன் வந்ததும் தவக்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.