30–ந் தேதி உறவினருடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் வீட்டைவிட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்த மாணவி


30–ந் தேதி உறவினருடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் வீட்டைவிட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்த மாணவி
x
தினத்தந்தி 27 Aug 2018 5:56 AM IST (Updated: 27 Aug 2018 5:56 AM IST)
t-max-icont-min-icon

உறவினருடன் 30–ந் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில், கல்லூரி மாணவி வீட்டைவிட்டு வெளியே காதலனை பதிவு திருமணம் செய்து கொண்டார்.

காலாப்பட்டு,

புதுச்சேரியை அடுத்த சின்ன காலாப்பட்டு நடுத்தெருவைச் சேர்ந்தவர் சங்கர். இவர் காலாப்பட்டு பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி லதா. இவர்களின் மகள் அழகம்மை (வயது 19), இவர் புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் லேப்–டெக்னீஷியன் படிப்பில் 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.

மாணவி அழகம்மைக்கும், அவருடைய உறவினரின் மகனுக்கும் திருமணம் செய்ய அவர்களின் பெற்றோரால் முடிவு செய்யப்பட்டு வருகிற 30–ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இரு வீட்டாரும் திருமண வேலைகளை செய்து வந்தனர்.

சம்பவத்தன்று அழகம்மை கல்லூரிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரை உறவினர் வீடு, நண்பர்களின் வீடுகளில் தேடிப்பார்த்தும் பலன் இல்லை.

அதைத் தொடர்ந்து அழகம்மையின் தாய் லதா, தனது மகள் மாயமானது குறித்து காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாயமான மாணவி அழகம்மை அதே பகுதியைச் சேர்ந்த ஐ.டி.ஐ. படித்த ஜான் என்ற வாலிபருடன் நேற்று முன்தினம் காலாப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு வந்து தஞ்சம் அடைந்தார். அப்போது அழகம்மை வாலிபர் ஜானை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாகவும், பெற்றோர் பார்த்து முடிவு செய்த மாப்பிள்ளை பிடிக்காததால் வீட்டைவிட்டு வெளியேறி காதலனை பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து போலீசார் மாணவி அழகம்மையையும், அவருடைய காதலனையும் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அப்போது மாணவி அழகம்மை தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜானுடன் செல்ல விரும்புவதாக தெரிவித்ததை தொடர்ந்து அழகம்மை மேஜர் என்பதால் காதல் கணவருடன் செல்ல அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story