சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தாவிட்டால் அ.தி.மு.க. ஆட்சி கவிழும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்


சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தாவிட்டால் அ.தி.மு.க. ஆட்சி கவிழும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 27 Aug 2018 1:34 AM GMT (Updated: 27 Aug 2018 1:34 AM GMT)

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் அ.தி.மு.க. ஆட்சி கவிழும் என்று சேலத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

சேலம்,

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று சேலத்துக்கு வந்தார். தொடர்ந்து அவரை சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் சேலம் ராமலிங்கபுரம், பாரப்பட்டி, பூலாவாரி, பருத்திக்காடு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் நிலம் கையகப்படுத்த கோர்ட்டில் இடைக்கால தடை பெற்று தந்ததற்கு நன்றி தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம்-சென்னைக்கு 3 தேசிய நெடுஞ்சாலைகளும், 2 ரெயில் பாதைகளும், ஒரு விமான சேவையும் உள்ளது. இதனால் 8 வழிச்சாலை திட்டம் தேவையில்லை. தனிப்பட்ட நபர்களுக்காகவும், இயற்கை வளங்களை அழிக்கவும் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முயல்கிறது. இது வளர்ச்சி திட்டம் இல்லை. நிலம் பறிபோய் விடுமோ என விவசாயிகளும், அப்பகுதி மக்களும் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் அந்த திட்டத்தை எதிர்த்து நான் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தேன். நீதிபதிகள் சேலம்-சென்னை 8 வழி பசுமைச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

எங்களது நோக்கம் இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். சட்ட ரீதியாக மட்டுமின்றி தேவைப்பட்டால் 8 வழிச்சாலைக்கு எதிராக அரசியல் ரீதியாகவும் பா.ம.க. போராட்டம் நடத்தும். இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கோடி நிதியில் தமிழகம் முழுவதும் 33 ஆறுகளில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்.

கர்நாடகா அணைகளில் இருந்து கடந்த 6 வாரமாக 287 டி.எம்.சி. (1 டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு இருக்கிறது. மேட்டூர் அணையும் 3 முறை நிரம்பி காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. பாசனத்திற்கு 50 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், 150 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்திருக்கிறது. கால்வாய்களை சரியாக தூர்வாராததால் கடைமடை பகுதிக்கு இன்னும் தண்ணீர் செல்லவில்லை. சேலம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் உபரிநீர் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்றிட உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதை நடத்தாமல் இடஒதுக்கீடு பறிக்கப்படும் பட்சத்தில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும். அதன்பிறகு அ.தி.மு.க. ஆட்சி கவிழும்.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு செலுத்தப்படும் நினைவேந்தலை அரசியலாக பார்க்கக்கூடாது. அவர் தி.மு.க.விற்கு மட்டும் தலைவர் அல்ல. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலேயே மூத்த அரசியல் தலைவரான அவருக்கு அஞ்சலி செலுத்த யார் வேண்டுமானாலும் வரலாம். பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வருவதை உள்நோக்கம் கொண்டு பார்க்கக்கூடாது. அது நினைவேந்தல் நிகழ்ச்சி.

தமிழக பொதுப்பணித்துறையில் 5 திட்டங்களில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். பொதுப்பணித்துறை மட்டுமின்றி மொத்தம் 25 துறைகளில் ஊழல் நடந்திருக்கிறது. தேவைப்பட்டால் இந்த வழக்கை நாங்கள் சட்ட ரீதியாக அணுகுவோம். இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பேட்டியின்போது, மாநில துணைப்பொதுச்செயலாளர் அருள், குணசேகரன், மாவட்ட செயலாளர்கள் கதிர்ராசரத்தினம், நடராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story