குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கிய கலெக்டர்


குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கிய கலெக்டர்
x
தினத்தந்தி 28 Aug 2018 4:00 AM IST (Updated: 27 Aug 2018 6:22 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தவர்களுக்கு உணவு பொட்டலங்களை கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் நேரில் வந்து தங்களின் குறைகளை மனுக்களாக கொடுத்தனர். நேற்று நடந்த கூட்டத்திற்கு புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள வீரராகவராவ் தலைமை வகித்தார்.

மனு கொடுக்க வந்தவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் வீரராகவராவ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் மனுகொடுக்க வந்தவர்கள் பசியோடு செல்லாமல் இருக்க உணவு பொட்டலங்களை வழங்கினார். இதுதவிர கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் 2 இடங்களில் சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:–

 மாவட்டத்தின் கடைக்கோடி பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களின் குறைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் கூட்டத்திற்கு அதிகாலையிலேயே எழுந்து வருகின்றனர். அவர்கள் தங்களின் உணவுதேவையை பூர்த்தி செய்வது என்பது அனைவருக்கும் இயலாத காரியம். இதற்காக குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வரும் மக்கள் பட்டினியோடு வீடுகளுக்கு திரும்பி செல்லக்கூடாது என்பதற்காக அனைவருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் இந்த உணவு பொட்டலங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மனுக்களை கலெக்டரிடம் நேரில் கொடுத்த மகிழ்ச்சியோடு பசியாற உணவு பொட்டலமும் பெற்ற பொதுமக்கள் புதிய கலெக்டரின் மனிதநேயமிக்க செயலை பாராட்டி சென்றனர்.


Next Story