கலெக்டர் அலுவலகத்திற்கு காலிகுடங்களுடன் மனு கொடுக்க வந்த கிராம மக்கள்
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் காலிகுடங்களுடன் வந்து மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம்,
மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ராமநாதபுரத்தை அடுத்துள்ள ஆர்.காவனூர் அருகே உள்ள பெருங்களுரை சேர்ந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் வந்திருந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– எங்கள் பகுதியில் 250 வீடுகளில் ஆயிரத்து 300 பேர் வசித்து வருகிறோம்.
எங்கள் கிராமத்திற்கு காவிரி குடிநீர் திட்டத்தில் குழாய்கள் போட்டு ஒரு சில நாட்கள் தான் தண்ணீர் வந்தது. அதன்பின்னர் இதுநாள் வரை குடிநீர் வரவில்லை. அடிகுழாய் அமைக்கப்பட்டிருந்த நிலையில் வறட்சி காரணமாக அதிலும் தண்ணீர் வரவில்லை. இதன்காரணமாக ஆர்.காவனூர் பகுதியில் காவிரி குழாய் நீர் கசிவில் இருந்து தண்ணீர் பிடித்து வருகிறோம். எனவே உடனடியாக எங்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மாவட்ட பொறுப்புகுழு தலைவர் பாதுசா தலைமையில் உடலில் கட்டுபோட்டு பாதிக்கப்பட்டவர்களை போல வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, அனைவருக்கும் சரியான மருத்துவ உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு செய்து, போலி ஆம்புலன்சுகளை தடை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், கூட்ட முடிவில் அதிகாரிகளிடம் கூறியதாவது:–
மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் அந்தந்த மனுக்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாக குறைகளை தீர்த்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குடிநீர் சம்பந்தப்பட்ட புகார்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து உடனுக்குடன் தீர்த்து தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும். கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை என்று திரும்பி வரக்கூடாது. முதல்–அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.