லாரி மீது சரக்கு ஆட்டோ மோதியதில் டிரைவர் பலி தப்பியோடிய லாரி டிரைவர் மாரடைப்பால் சாவு


லாரி மீது சரக்கு ஆட்டோ மோதியதில் டிரைவர் பலி தப்பியோடிய லாரி டிரைவர் மாரடைப்பால் சாவு
x
தினத்தந்தி 28 Aug 2018 4:15 AM IST (Updated: 27 Aug 2018 11:13 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே டயர் வெடித்ததால் லாரி மீது சரக்கு ஆட்டோ மோதியதில் டிரைவர் பலியானார். தப்பியோடிய லாரி டிரைவர் மாரடைப்பால் இறந்தார்.

அன்னவாசல்,

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 54). அதேபகுதியை சேர்ந்தவர்கள் செந்தாமரைகண்ணன் (31), சுப்பிரமணியன் (31). இவர்கள் 3 பேரும் ஒரு சரக்கு ஆட்டோவில், மண்ணச்சநல்லூரில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு சென்று கொண்டிருந்தனர். மோகன் சரக்கு ஆட்டோவை ஓட்டினார். செந்தாமரைக்கண்ணன், சுப்பிரமணியன் அருகில் அமர்ந்து இருந்தனர். புதுக்கோட்டை அருகே கரப்பட்டி என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, சரக்கு ஆட்டோவின் முன் பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் நிலைதடுமாறிய சரக்கு ஆட்டோ, எதிரே காரைக்குடியில் இருந்து வந்த ஒரு லாரி மீது மோதியது. இந்த விபத்தில் மோகன், செந்தாமரைகண்ணன், சுப்பிரமணியன் ஆகியோர் படுகாயமடைந்தனர். சரக்கு ஆட்டோவில் இருந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் சாலையில் விழுந்தன.


இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம் வடவாளம் பகுதியை சேர்ந்த சேகர் (54). லாரியில் இருந்து கீழே குதித்து தப்பியோடினார். ஓடும் போது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால், சாலையில் விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயமடைந்த மோகன், செந்தாமரைகண்ணன், சுப்பிரமணியன் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாரடைப்பால் இறந்த லாரி டிரைவர் சேகரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சாலையில் கிடந்த அரிசி மூட்டைகளை அகற்றினர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story