குடகில் மீண்டும் தொடர் மழை மறுசீரமைப்பு பணிகள் பாதிப்பு


குடகில் மீண்டும் தொடர் மழை மறுசீரமைப்பு பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 28 Aug 2018 4:00 AM IST (Updated: 28 Aug 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளம்,நிலச்சரிவால் உருக்குலைந்த குடகில் மீண்டும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மறுசீரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குடகு,

கர்நாடகம்-கேரள மாநில எல்லையில் உள்ளது குடகு மாவட்டம். கடல் மட்டத்தில் இருந்து 120 மீட்டர் உயரத்தில் இந்த மாவட்டம் அமையப்பெற்றுள்ளது. மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் பச்சை பசேல் என காட்சி தரும் வனப்பகுதிகளையும், காபி தோட்டங்களையும் தன்னகத்தே கொண்டது தான் இந்த மாவட்டம். இதனால் மலைநாடு என்றும் அழைக்கப்படுகிறது. காவிரி ஆறு உற்பத்தி ஆகும் பாகமண்டலா, துபாரே யானைகள் முகாம், குஷால் நகரில் உள்ள ஹாரங்கி அணைக்கட்டு, புத்த மத தங்ககோவில், வனப்பகுதிகளில் சாகச நடைபயணம் மேற்கொள்ளும் இடங்கள், அப்பி நீர்வீழ்ச்சி உள்பட ஏராளமான சுற்றுலா தலங்களும் குடகில் உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாகவும் குடகு திகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் குடகில் கடந்த 8-ந்தேதி முதல் 22-ந் தேதி வரை கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து கோரதாண்டவமாடிய பேய் மழைக்கு இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். சிலர் காணாமல் போய் உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. கனமழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் குடகு மாவட்டத்தின் சோமவார்பேட்டை, மடிகேரி தாலுகாக்கள் உருக்குலைந்தன. சாலைகளிலும் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டதுடன், விரிசலும் காணப்பட்டது. இதனால் மடிகேரி -மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம்-நிலச்சரிவால் வீடுகளை இழந்த 5 ஆயிரத்து 27 பேர் 51 முகாம்களில் தங்கியிருந்தனர். அவர்களுக்கு அரசு சார்பிலும், பல்வேறு தன்னார்வ அமைப்பினர் சார்பிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வெள்ளம் முற்றிலும் வடிந்தது. இதனால் முகாம்களில் தங்கியிருந்த மக்கள் தங்களது பகுதிகளுக்கு செல்லத் தொடங்கினர். நேற்று வரை 1,800 பேர் முகாம்களில் இருந்து தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்கள் வெள்ளம் புகுந்ததால் சேதமடைந்த வீடுகளை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வீடுகள் இடிந்து, உடைமைகளை இழந்து தவிக்கும் 3,227 பேர் முகாம்களில் இன்னும் சோகத்துடன் அமர்ந்துள்ளனர். வெள்ளம்- நிலச்சரிவால் மடிகேரி தாலுகாவில் மட்டும் முக்கொட்லு, மக்கந்தூர், அட்டிஒலே, ஜோடுபாலா, ஆலேறி, கல்லூர், தொட்டகுந்துபெட்டா உள்பட 30 கிராமங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தான் வீடுகளை இழந்து முகாம்களில் பரிதவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மக்களுக்கு துணிமணிகள், உணவு, படுக்கை விரிப்புகள், குளிரை தாங்கும் ஆடைகள், பைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பில் தற்காலிகமாக அலுமினிய கொட்டகைகள் அமைத்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதுபோல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் வேகமெடுத்துள்ளன. சேதமடைந்த சாலைகளில் மணல் மூட்டைகள் அடுக்கியும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பொக்லைன் எந்திரம் உதவியுடனும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் வருகிற 31-ந்தேதி வரை குடகு மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளை மூடவும் கலெக்டர் ஸ்ரீவித்யா அறிவித்துள்ளார். இதற்கு ஓட்டல்-தங்கும் விடுதி சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முக்கொட்லு, மக்கந்தூர், அட்டிஒலே, ஜோடுபாலா, கல்லூர் பகுதிகளில் இருந்த வீடுகள் நிலச்சரிவில் சிக்கி இடிந்து விழுந்துவிட்டன. அந்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது யாராவது சிக்கியுள்ளனரா? என்பதை ஹெலிகேமராக்கள் உதவியுடன் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த ஆய்வின் உதவியால் இதுவரை 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்கந்தூர் பகுதியில் 5-க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் இருப்பதாகவும், அவர்களது உடல்களை மீட்டுத்தரும்படி அவர்களது குடும்பத்தினர் கலெக்டர் ஸ்ரீவித்யாவிடம் கோரிக்கை வைத்தனர். அதைதொடர்ந்து மக்கந்தூர் பகுதியில் ஹெலிகேமராக்கள் மூலம் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதுபோல் வீடுகள் மீது மண் விழுந்து அமுக்கிய பகுதிகளில் பொக்லைன் எந்திரம் உதவியுடன் தோண்டும் பணியும் நடந்து வருகிறது.

15 நாட்களுக்கு மேலாக நிலைக்குலைந்த குடகு மாவட்டம் இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. மீட்பு பணிகளும், நிவாரணப் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனால் இன்னும் 15 நாட்களுக்குள் குடகு மாவட்டத்தில் மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் குடகு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மழை தொடங்கியது. இந்த மழை மடிகேரி, பாகமண்டலா, கரிக்கே, சுண்டிகொப்பா, மக்கந்தூர், அட்டிஒலே, சித்தாப்புரா, கோணிகொப்பா உள்ளிட்ட பகுதிகளில் பெய்தது. நேற்றும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. மீண்டும் தொடர் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் குடகு மாவட்ட மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மடிகேரியில் 27.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இந்த மழையால் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும், மறுசீரமைப்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சுண்டிகொப்பா முகாமில் தங்கியிருந்த மக்களுக்கு நேற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீவித்யா நிவாரண பொருட்களை வழங்கினார். அத்துடன் மக்களுக்கு உணவு தயார் செய்வதை பார்வையிட்டார்.

Next Story