மாவட்டத்தில் ரூ.2½ கோடியில் 27 குளங்கள் சீரமைப்பு பணி, கலெக்டர் தகவல்


மாவட்டத்தில் ரூ.2½ கோடியில் 27 குளங்கள் சீரமைப்பு பணி, கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 28 Aug 2018 4:00 AM IST (Updated: 28 Aug 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் ரூ.2½ கோடி மதிப்பீட்டில் 27 குளங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கலெக்டர் லதா தெரிவித்தார்.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்கால் ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் குளம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் லதா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:–

ஒவ்வொரு ஊரக பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்திடும் வகையிலும், தூய்மை பகுதியாக பாதுகாத்திடும் விதமாகவும் பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய குளங்களை தேர்வு செய்து அந்த குளத்தை தூர்வாரி கரைகளை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கரைகளின் மீது அலங்கார கற்கள் பதிப்பதுடன், நான்கு பக்க கரைகளிலும் மரங்கள் நடவு செய்து பாதுகாத்திடும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தற்போது சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்கால் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள குளத்தில் ரூ.10½ லட்சம் மதிப்பீட்டில் தூர்வாருதல் மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோன்று மாவட்டத்தில் 12 ஊராட்சிகளில் தலா ஒரு குளம், 12 பேரூராட்சிகளில் தலா ஒரு குளம், 3 நகராட்சிகளில் தலா 3 குளம் என 27 குளங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இத்திட்டமானது ஊராட்சி பகுதியில் உள்ள மற்ற குளங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அருள்மணி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் சென்றனர்.


Next Story