அரசு டாக்டர்கள் வராததால் மருத்துவ பரிசோதனை இன்றி தவித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள்
அரசு டாக்டர்கள் வராததால் மருத்துவ பரிசோதனை இன்றி மாற்றுத்திறனாளி மாணவர்கள் தவித்தனர்.
ஊட்டி,
ஊட்டி வட்டார வளமைய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் ஊட்டி சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. கண் பார்வை குறைபாடு, கால் ஊனமுற்றோர், செவித்திறன் குறைபாடு உடைய 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் 100–க்கும் மேற்பட்டோர் தங்களது பெற்றோர்களுடன் வந்து இருந்தனர். அவர்கள் புகைப்படம், ரேஷன் கார்டு நகல் மற்றும் அசலை கொண்டு வந்தார்கள்.
மருத்துவ முகாமுக்கு வந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் 2 அறைகளில் இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர். ஆனால் 2 மணி நேரம் ஆகியும் மருத்துவ பரிசோதனைக்கு அரசு டாக்டர்கள் யாரும் வரவில்லை. இதனால் மாற்றுத்திறனாளி மாணவர்கள் வெகுநேரம் காத்து இருந்தனர். அதன்பின்னர் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து எலும்பு, மூட்டு மருத்துவம் மற்றும் கண் மருத்துவ டாக்டர்கள் 2 பேர் முகாமுக்கு வந்தனர். ஆனால் மனோதத்துவ டாக்டர் வரவில்லை.
இதையடுத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் 22 பேருக்கு உபகரணங்கள் வழங்குவது தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அரசு டாக்டர்கள் மூலம் பரிசோதனை மேற்கொண்டால் தான் மாற்றுத்திறன் எத்தனை சதவீதம் என்பது குறித்த விவரத்துடன் அரசால் வழங்கப்படும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை கிடைக்கும். அதன் மூலம் உதவி தொகை, பராமரிப்பு தொகை மற்றும் அரசின் சலுகைளை பெற முடியும். அரசு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வராததால், அங்கு வந்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் சிலர் பரிசோதனை இல்லாமல் தவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 150–க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் மத்திய அரசுக்கு இணையான காலமுறை ஊதியம் அரசு டாக்டர்களுக்கு வழங்க வேண்டும், அனைத்து பணப்படிகளை வழங்க வேண்டும் ஆகிய 2 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முதல் ஊட்டியில் அரசு டாக்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ பரிசோதனை, கூட்டம் போன்றவற்றில் கலந்துகொள்வது இல்லை என்று முடிவு செய்து உள்ளனர். ஆனால் வழக்கம்போல் ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள்.