வீடுகள் கட்டித் தர வேண்டும் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் கோரிக்கை


வீடுகள் கட்டித் தர வேண்டும் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Aug 2018 4:15 AM IST (Updated: 28 Aug 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

மாற்று இடத்தில் நிலம் வழங்கி வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று காவிரி கரையோரம் வசிக்கும் கரடிகோடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடகு,

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா அருகே உள்ளது, கரடிகோடு கிராமம். இந்த கிராமம் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் சமயங்களில் கரடிகோடு கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. அதுபோல் சமீபத்தில் பெய்த கனமழையால் காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் புரண்டு ஓடியது. இதனால் கரடிகோடு கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியிருந்தனர்.

காவிரி ஆற்றில் வெள்ளம் வடிந்ததை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்தப் பகுதி மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினர். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், சேறும் சகதியுமாக இருந்தது. மேலும் வீட்டு உபயோகப் பொருட்கள் நீரில் மூழ்கி நாசிமாகிவிட்டன. இதனால் அவர்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கரடிகோடு கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று சித்தாப்புரா கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர் மணி, பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி விஸ்வநாத் ஆகியோரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், கரடிகோடு பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் நாங்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகிறோம். மேலும் வீடுகளை புதுப்பிக்க கடன் வாங்கி சீரமைப்பு பணிகளை மேற்கொள்கிறோம். எனவே எங்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கி வீடுகள் கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதுபற்றி அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கிராம பஞ்சாயத்து தலைவர் மணி, கரடிகோடு கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார்.

Next Story