மேட்டுப்பாளையம் அருகே அட்டகாசம் செய்து வந்த சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கியது
மேட்டுப்பாளையம் அருகே அட்டகாசம் செய்து வந்த சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கியது. அதை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட சிறுமுகை வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, காட்டெருமை, காட்டு யானை, கழுதைப்புலி உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள மலையடிவார பகுதியான சென்னாமலைக்கரடு என்ற இடத்தில் கடந்த ஒரு வருடமாக சிறுத்தைப்புலியின் அட்டகாசம் இருந்தது.
வனப்பகுதியை விட்டு வெளியே வந்த அந்த சிறுத்தைப்புலி அங்குள்ள தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து இதுவரை 4 கன்று குட்டிகள், 30–க்கும் மேற்பட்ட நாய்களை கொன்று உள்ளது. இதனால் அச்சம் அடைந்த கிராம மக்கள், சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சிறுமுகை வனச்சரக அதிகாரி மனோகரன் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் அந்தப்பகுதியில் 10–க்கும் மேற்பட்ட இடங்களில் கூண்டு வைத்து பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனாலும் சிறுத்தை கூண்டுக்குள் சிக்காமல் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னாமலைக்கரடு அடிவார பகுதியில் மோத்தேபாளையம் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரின் தோட்டத்தில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். அத்துடன் அந்த கூண்டுக்குள் ஒரு நாயையும் கட்டி வைத்தனர். வனத்துறையினர் சிறுத்தைப்புலியின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வந்தனர். கூண்டுக்குள் இருந்த நாய்க்கு தினமும் உணவு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு நாய்க்கு உணவு வைப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வனத்துறையினர் சென்றனர். அப்போது கூண்டுக்குள் இருந்து உறுமல் சத்தமும், கூண்டை டமார் டமார் என்று அடிக்கும் சத்தமும் கேட்டது. இதனால் சுதாரித்துக்கொண்ட வனத்துறையினர் மிகவும் கவனமாக பார்த்தபோது கூண்டுக்குள் சிறுத்தைப்புலி இருந்தது. அந்த சிறுத்தைப்புலி மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டது.
இந்த செய்தி அந்தப்பகுதியில் காட்டுத்தீ போன்று பரவியது. இதனால் அங்கு ஏராளமானவர்கள் திரண்டனர். சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கிய தகவல் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ், சிறுமுகை வனச்சரக அதிகாரி மனோகரன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரைந்து சென்று, கூண்டில் சிக்கிய சிறுத்தைப்புலியை பார்வையிட்டனர்.
பின்னர் அந்த சிறுத்தைப்புலியை அடர்ந்த வனப்பகுதியில் விட முடிவு செய்தனர். இதையடுத்து சிறுத்தைப்புலி சிக்கிய கூண்டை வனத்துறையினர் மிகவும் பாதுகாப்பாக லாரியில் ஏற்றி, நீலகிரி மாவட்டம் கிழக்கு சரிவு காப்புக்காடு அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு நேற்று மாலை 5 மணிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்குள்ள ஒரு சமவெளி பகுதியில் லாரியை நிறுத்தி, அதன் பின்பகுதியில் இருந்த கூண்டின் கதவை திறந்தனர். அப்போது கூண்டுக்குள் இருந்த சிறுத்தைப்புலி வேகமாக வெளியேறி, அங்குள்ள வனப்பகுதிக்குள் ஓடியது. தொடர்ந்து வனத்துறையினர் அந்த சிறுத்தைப்புலியை கண்காணித்தனர். அது அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதும் அங்கிருந்து வனத்துறையினர் திரும்பினார்கள்.
இது குறித்து சிறுமுகை வனச்சரக அதிகாரி மனோகரன் கூறும்போது, ‘கூண்டுக்குள் சிக்கியது ஆண் சிறுத்தைப்புலி ஆகும். அதற்கு 4 வயது இருக்கும். சிறுமுகை வனச்சரக பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தைப்புலியை பிடிப்பது இது தான் முதல் முறை’ என்றார். கடந்த ஒரு ஆண்டாக அச்சுறுத்தி வந்த சிறுத்தைப்புலி பிடிபட்டு இருப்பதால் அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.